பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
அறத்தின் குரல்
 

விடாமல் தடுத்து அவர்களைத் தங்கள் தங்கள் ஊர் திரும்பும்படி செய்து பாண்டவர்களைக் காப்பாற்றினார். மாறுவேடத்திலிருந்த பாண்டவர்கள் ஐவரும் சுயம்வரத்தில் அர்ச்சுனன் அடைந்த கன்னி திரெளபதியுடன் புறநகரில் குந்திதேவி தங்கியிருந்த குயவனின் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டு வாசலில் இருந்தவாறே, ‘தாயே! இன்று ஓர் பெறற்கரிய பொருளைப் பெற்று வந்திருக்கிறோம் நாங்கள்’ -என்று குந்தியின் செவியில் கேட்குமாறு கூறினார்கள் பாண்டவர்கள். உண்மை என்ன என்பதை வெளியே வந்து காணாத குந்தி, ‘அப்படியானால் அந்த அரும் பொருளை நீங்கள் ஐவருமே அனுபவித்து மகிழுங்கள்!’ என்று உள்ளே இருந்தவாறே மறுமொழி கூறிவிட்டாள். தாய்மொழியை மந்திரமாக மேற்கொள்ளும் பாண்டவர்கள் இந்த விபரீத நிகழ்ச்சி காரணமாக ஐவருமே திரெளபதியின் மேல் உரிமை கொண்டாடுமாறு நேர்ந்து விட்டது. வெளியே வந்து உண்மையைக் கண்டு அறிந்து கொண்டதும், ‘எல்லாம் விதியின் விளைவு!’ என்று கூறி மனம் வருந்தினாள் குந்தி. சுயம்வர நிகழ்ச்சியிலிருந்து போர் ஏற்பட்டதுவரை யாவற்றையும் தாயிடம் விவரித்துக் கூறினார்கள் பாண்டவர் கள் சுயம்வர மண்டபத்திற்குள்ளிருந்து பாண்டவர்கள் புறப்பட்ட போதே அவர்கள் மேல் சந்தேகங் கொண்ட துருபத மன்னன் பின்னாலேயே ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் மூலம் அந்தணர்களாக மாறுவேடத்தில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்றும், திரௌபதியினால் மணமாலை சூட்டப்பட்டவன் அர்ச்சுனனே என்றும் அவன் அறிந்து கொண்டான். உடனே தகுந்த மரியாதைகளுடன் பாண்டவர்களையும் குந்தி திரெளபதி ஆகியவர்களையும் அழைத்து வரச் செய்தான். திரெளபதிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தக் கருதினான். ஆனால் பாண்டவர்களோ திரெளபதியை ஐவரும் மணந்து கொள்ளும்படி நேர்ந்த சம்பவத்தைக் கூறி அப்படியே செய்ய வேண்டும் என்றார்கள்.