பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அறத்தின் குரல்

ஐவரும் மணம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு அரசு, ஆட்சி, புது நகரம் என்று இப்படி எல்லாவிதமான நலன்களும் கூடி வருகின்ற நேரத்தில் அவள் காரணமாக ஒரு சிறு பூசல் ஏற்பட்டாலும் ஒற்றுமை அதிவேகமாகக் குலைந்துவிடும். இதனால் நீங்கள் ஐவரும் திரௌபதியோடு இல்வாழ்க்கை நடத்த வேண்டியது பற்றி நான் வகுத்துக் கொடுக்கும் வரன் முறையை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒருவர் வீதம் அவளோடு நீங்கள் ஐவரும் தனித்தனியே இல்வாழ்க்கை நடத்துங்கள். அவ்வாறு நடத்தும்போது ஒருவர் இல்வாழ்க்கைக் காலத்தில் உங்களில் அந்த ஒருவர் ஒழிய மற்றவர்கள் அவளைக் காணவே கூடாது. இந்தக் கட்டுப்பாடு மிகமிக அவசியமானது. தப்பித் தவறிக் காணும் படியாக நேர்ந்து விட்டால் அப்படிக் கண்டு விட்டதன் பரிகாரத்திற்காக ஓர் வருட காலம் கண்டவர் எவரோ அவர் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்படுத்திக்கொண்டால் திரெளபதி காரணமாக உங்கள் சகோதரத்துவத்திற்கு அழிவு ஏற்படாது.” நாரதர் இவ்வாறு கூறி முடித்ததும் பாண்டவர்கள் இந்த நிபந்தனைக்கு உடன் பட்டனர்.

தங்கள் ஒற்றுமைக்கு இந்த ஏற்பாடு நல்ல பாதுகாப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. நிபந்தனையின்படி அந்த ஆண்டில் தருமனோடு திரெளபதி இல்வாழ்வு நடத்த வேண்டுமென்று முடிவு செய்து கொண்டார்கள். நாரதர் தம்மால் ஒரு நல்ல காரியம் நிறைவேறிய திருப்தியுடன் விடைபெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் நலனில் அக்கறை கொண்டு அம்முனிவர் இந்திரப் பிரத்த நகருக்கு விஜயம் செய்து நல்லுரை கூறியதற்காக அவரை வணங்கி மரியாதை செலுத்தி நன்றியோடு விடை கொடுத்தனர். சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் மேல் கொண்ட மோகத்தால் தவத்தையும் தங்களையும் அழித்துக் கொண்ட வரலாறு அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது.