பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110
அறத்தின் குரல்
 

இடத்தை அடைவதற்கு நடுவில் ஓர் பூம்பொழிலைக் கடக்க வேண்டும். இந்தப் பூம்பொழில் திரெளபதிக்கும் அவளுடைய அந்தப்புரத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பழகுவதற்குரிய இடம். அந்தணருக்கு உதவி செய்து அவருடைய பசுக்களை மீட்டுத் தரவேண்டுமென்ற அவசரத்தினால் மகளிர்க்குரிய அந்தப் பூம்பொழிலின் நடுவே செல்லும் குறுக்கு வழியாகப் படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் அர்ச்சுனன். அங்கே திரெளபதி தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. தருமனும் அப்போது அவளோடு பூம்பொழிலில் இருந்தான். ஒரு பூஞ்செடிக்குக் கீழே திரெளபதியின் பாடகமும் சிலம்பும் சுமந்த பாதங்களை மட்டும் அர்ச்சுனன் பார்க்கும்படியாக நேர்ந்து விட்டது. தீயை மிதித்து விட்டவன் போலத் திடுக்கிட்டான் அவன். நாரதர் கூறிய நிபந்தனை நினைவிற்கு வந்தது. திரெளபதியையே பார்க்கக் கூடாது என்றால் அவள் திருவடிகளை மட்டும் எப்படிப் பார்க்கலாம்? அதுவும் பிழைதானே? எனவே கட்டுப்பாட்டுக்கு அடங்கி நிபந்தனைப்படி தான் தீர்த்தயாத்திரை போவதென்று மனத்திற்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டான்.

அந்தணருக்கு வாக்களித்தபடி பசுக்களை மீட்டுத் தந்த பின் யாத்திரையைத் தொடங்க முடிவு செய்து கொண்டு வில்லும் கணையும் ஏந்தி அந்தணரோடு புறப்பட்டான். காட்டு வேடர்களை வென்று அந்தணரின் பசுக்களை மீட்டுக் கொடுத்த உடனே அவசரமாக அரண்மனை திரும்பி யாத்திரைக் கோலம் பூண்டான். புறப்பட்டுச் செல்வதற்கு முன் சகோதரர்களிடம் நிகழ்ந்த செய்தியைக் கூறி விடைபெற்றான். பாரத தேசத்தில் மானிட சரீரத்தின் பாவங்களைக் கழுவி பவித்திரமாக்கும் புண்ணிய நதிகள் அநேகம் இருக்கின்றன. அவற்றுள் சிறந்ததும் முதன்மை வாய்ந்ததும் கங்கை நதியே. வேறு பல முனிவர்களுடனும் தேசயாத்திரை புரிபவர் களுடனும் சேர்ந்து பிரயாணம் செய்த அர்ச்சுனன் முதன்முதலாக இவ்வளவு சிறப்புப் பொருந்திய கங்கை நதியில்