பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

115

கேட்டுத் தன் தோழிகளில் எவராகவாவது இருக்கும் என்றெண்ணிக் கொண்டு, “யாரடி பெண்ணே! அதற்குள் மலர் கொய்து முடித்து விட்டாயா?” என்று கேட்டவாறே திரும்பிப் பார்த்தாள் சித்திராங்கதை. அடுத்த கணம் திகைப்பும் வியப்பும் பயமும் உணர்ச்சி வடிவில் அவளை ஆட்கொண்டன. வெட்க மேலீட்டால் அவள் கால்கள் அங்கிருந்து அசைவதற்கு மறுத்து விட்டன.

கையில் பூக்குடலையோடு நின்று கொண்டிருந்த அவளுக்கு எதிரே அழகே வடிவான இளங்காளை ஒருவன் புன்முறுவல் பூத்து நின்று கொண்டிருந்தான். அவனை உற்றுப் பார்த்ததில் ‘யார்?’ என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அன்று அவையில் தன் தந்தையினிடம் ‘கன்னியா குமரிக்கு நீராடச் செல்பவராகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட துறவிதான் இப்போது இப்படி நவயௌவன புருஷனாக நிற்கிறார்!’ -அவனுடைய அழகு அவளைக் கவர்ந்தது. அவளும் நேரே பார்க்கத் துணிவின்றி ஓரக்கண்களால் மெல்ல அவனைப் பார்த்தாள். அவனுடைய மோகனப் புன்முறுவலைக் காணக் காண அவளுடைய வாயிதழ்களும் நெகிழ்ந்தன. பூவினுள்ளே மறைந்திருக்கம் நறுமணத்தைப் போல் அவளுடைய அந்தப் புன்னகையில் ஒருவகைக் கவர்ச்சி இலைமறை காய்போல் மறைந்து தோன்றியது. நாழிகை கழியக் கழியச் சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் இடையிலேயிருந்த தொலைவு குறைந்து கொண்டே வந்தது, இருவரும் ஒருவருக்கொருவர் மிக மிக அருகிலே நின்றார்கள். ஒருவர் விடுகின்ற மூச்சு இன்னொருவர் முகத்தில் படும். உள்ளங்கள் அன்பால் தழுவிப் பிணைந்து விட்டதைப் போலவே உடல்களும் தழுவிக் கொண்டன. இருவரும் அங்கே அப்போதே காந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.

மறுபடியும் சித்திராங்கதையின் தோழியர்கள் அவளைத் தேடி வந்த போது தான் அவள் அர்ச்சுனனைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றாள். இவ்வாறே பல நாட்கள்