பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அறத்தின் குரல்

சித்திராங்கதை - அர்ச்சுனன் காதல் களவு முறைப்படி அந்தப் பூம்பொழிலில் வளர்ந்து வந்தது. சித்திராங்கதையின் தோழிகள் படிப்படியாக இந்த விபரத்தை அறிந்து கொண்டு அரசனுக்குத் தெரிவித்தனர். அரசன் அர்ச்சுனனை வரவழைத்து விசாரித்து ‘அவன் யார்’ என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தான். ‘கன்னியை கண்ணுற்று ஆடவந்ததாக’ -அன்று இரண்டு பொருள்படும்படியாகப் பாண்டியனுக்குக் கூறிய பதிலை மெய்ப்பித்து விட்டான் அர்ச்சுனன். பாண்டவ சகோதரர்களில் ஒருவனும் ‘வில்விசயன்’ என்ற சிறப்பு பெயர் பெற்றவனும் ஆகிய அர்ச்சுனன் தனக்கு மருமகனாக வாய்த்ததில் வழுதி பெரிதும் திருப்தி கொண்டு அவர்களுக்கு மணம் செய்வித்தான். வானுலக இன்பத்தினும் சிறந்த இன்பத்தைச் சித்திராங்கதையும் அர்ச்சுனனும் திங்கள் கணக்கில் அனுபவித்து மகிழ்ந்தனர். பாண்டிய மரபு தழைக்க ஓர் ஆண்மகவு வேண்டும் என்று மன்னன் நான்முகக் கடவுளிடம் பெற்றிருந்த வரம் நிறைவேறுமுகமாக அர்ச்சுனனுக்கும் சித்திராங். கதைக்கும் ‘பப்புருவாகனன்’ என்றோர் புதல்வன் பிறந்தான்.

15. “நான் தான் விசயன்!”

பாண்டிய மன்னனிடமும் சித்திராங்கதையிடமும் அர்ச்சுனன் அவ்வளவு சுலபத்தில் விடை பெற்றுக் கொண்டு விட முடியவில்லை. அரிதின் முயன்று மிகுந்த நேரம் மன்றாடித் தான் விடை பெற்றுக் கொள்ள முடிந்தது. கண்களில் நீரும் நெஞ்சில் துயரமும் மல்கத் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தாள் சித்திராங்கதை. மதுரை மாநகரிலிருந்து புறப்பட்ட பின் மற்றும் பல பாண்டி நாட்டுத் திருப்பதிகளுக்குச் சென்றான். அவைகளில் நீராடி வழிபாடு செய்தபின் மேற்குக் கடலில் நீராடச் சென்றான். மேற்குக் கடலருகில் ஐந்து சிறு சிறு பொய்கைகள் இருந்தன. கடலில் நீராடி விட்டு வந்த அவன் இந்த ஐந்து பொய்கைகளையும்