பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
அறத்தின் குரல்
 


மனிதனுக்கும் நிகழ்ந்த போர் சிலப்பதிகாரக் கதையாகத் திகழ்கின்றது. கடமையைக் காக்க வேண்டுமென்று நேர்மைக்காக வந்து போராடிக் கொடுமையை அழித்த கடவுட் பிறப்பின் கதை இராமவதாரமாகக் காட்சி தருகின்றது. கட்டியங்காரன் என்ற ஒருவனின் மனத்தில் முளைத்த தீமை வித்து மெல்லக் கருகி அழிந்து சீவகன் என்ற திறமையாளனின் நல்மனம் நல்லன எண்ணி நல்லன செய்து நன்மை பெறும் மேன்மையைச் சீவக சிந்தாமணி தெரிவிக்கிறது. இன்னும் வளர்ப்பானேன்? வாழ்க்கையில் மட்டும் அல்ல, வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் காவியம், கலை, கற்பனை ஆகிய இவைகளிலும் கூட அறவுணர்ச்சிகளும், மறவுணர்ச்சிகளும் வந்து கலகமிடுகின்றன. மென்மையும் வன்மையுமான இந்த நேர்மாறான இரு துருவங்கள் போன்ற உணர்ச்சிகள் கொடிய முறையில் காக்கும் போது எளிய முறையில் மென்மையாக இயற்றப்பட வேண்டிய காவியங்களின் தாய்ச் சரக்கு என்னும் மூலப் பொருள் கிடைக்கிறது. உலகின் நாற்றிசைகளிலுமுள்ள உயிரிணம் முழுதுமே அறச் சார்புடையதாய், நேர்மை ஒன்றே நோக்கமாக வாழும் வழி எப்போதோ, எப்படியோ ஏற்பட்டு விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அன்று தொடங்கி வாழ்க்கையில் - உலக வாழ்க்கையில்தான் - சுவை, ஆர்வம், விரைவு என்ற இந்த அவசியமான அம்சங்கள் செத்துப் போகும். கலை, கற்பனை, காவியம் இவைகளும் மூலப் பொருளான தாய்ச் சரக்கு இல்லாமல் ஏங்கி நிற்க வேண்டியது தான்! எனவே அறத்தின் பெருமை, என்ற இந்த மாபெரும் ஒளி விளக்கமுற்று இலங்குவதற்கு வாழ்க்கையிலும் சரி, காவியத்திலும் சரி, மறத்தின் தீமை என்ற புலையிருள் பொதிந்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

காவியப் பண்பு

அறுசுவையில் கைப்பு என்ற ஒன்று, பெரும்பான் மையாக - ஏன் முற்றிலுங்கூட உலகில் எவராலும் விரும்பப் படுவதில்லை. அதற்காக அந்த சுவையிலும் அதைச் சார்ந்த