பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

119

இன்றிலிருந்து இந்த விழா முடிகின்றவரை ஈடுபடுவது நல்ல பயனை அளிக்கும்” -என்று அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே பலராமனை நோக்கிக் கூறினார் கண்ணன்.

பலராமன், “அப்படியே செய்யலாம் தம்பீ!” என்று சம்மதித்தான். அர்ச்சுனன் உள்ளூரத் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்துவிடாதபடி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இந்த ஏற்பாட்டின் படி கபட சந்நியாசியாக இருந்த அர்ச்சுனனுக்கும் பணி செய்வதற்காகச் சுபத்திரையையும் அவளுக்குத் துணையாக ஒரு தோழிப் பெண்ணையும் அங்கே விட்டு விட்டுப் பலராமனும் கண்ணனும் தங்கள் காரியங்களைக் கவனிக்கச் சென்றார்கள். போகிற போக்கில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து சுபத்திரையும் அவளுடைய தோழியும் துறவிக்கு பணிபுரிந்து மகிழ்ந்தார்கள். சுபத்திரை ஒரு நாள் முனிவரிடம் சில செய்திகளை விசாரித்து அறிய ஆசை கொண்டாள். “சுவாமி! தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள்? தங்களுடைய சொந்த ஊர் எது?” என்று கேட்டாள் சுபத்திரை.

“அம்மா! எனக்கு யாதும் ஊர்தான். ஆனாலும் நீ, நான் பிறந்து வளர்ந்து பெரியவனான ஊரைக் கேட்கிறாய் போலும்! என் ஊரை ‘இந்திரப் பிரத்தம்’ என்று பெயர் சொல்லுவார்கள்.”

“சுவாமி! தங்கள் ஊர் ‘இந்திரப் பிரத்தம்’ என்று கேள்வியுற்று மிகவும் மகிழ்கின்றேன். இந்திரப்பிரத்த நகரத்தில் தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியவர்கள் நலமாக இருக்கின்றார்களா?”

“நல்லது பெண்ணே! பாண்டவர்களைத் தானே கேட்கிறாய்? அவர்களுக்கு நலத்திற்கென்ன குறைவு? ஆமாம், எனக்கொரு சந்தேகம். நீ பாண்டவர்களில் எல்லோருடைய