பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121

சிரித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அன்போடு நோக்கினார்கள். தோழி பதறிப் போய்ச் சுபத்திரையின் அன்னை தேவகியிடம் சென்று உண்மையைச் சொல்லி விட்டாள்.

தேவகி பரபரப்படைவதற்கு முன்னால் விஷயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவளை அமைதியாக இருக்கும்படி செய்தார். பின்பு பலராமன் முதலிய எவருக்கும் தெரியாமல் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் கண்ணபிரான். திருமணச் சடங்குகளை நடத்துவதற்கு வசிட்டர் முதலிய முனிவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்ச்சுனனுக்குத் தாய், தந்தை முறையினராக இந்திரனும் இந்திராணியும் வந்தனர். “அர்ச்சுனா சுபத்திரையை மணந்து கொண்டு யாருமறியாமல் அவளோடு இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்றுவிடு! எவர் எதிர்த்தாலும் சரி அவர்களைத் தோல்வியுறச் செய்து மேலே செல்க” -என்று கூறி அவர்கள் இருவருக்கும் இரகசியமாகத் திருமணத்தை முடித்து வைத்தார் கண்ணபிரான், அவர் கூறியபடியே திருமணம் முடிந்தவுடன் ஓர் இரதத்தில் மணக்கோலத்தை நீக்காமலே சுபத்திரையுடன் இந்திரப்பிரத்த நகருக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.

‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்கின்ற கதையாக அர்ச்சுனனையும் புறப்படச் சொல்லிவிட்டுப் “பலவந்தமாக அர்ச்சுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டு போகிறான்” -என்று பலராமனிடமும் சொல்லி விட்டார் கண்ணபிரான். இதனால் அளவற்ற சினமும் ஆத்திரமும் கொண்டுவிட்ட பலராமன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். சுபத்திரையைத் தேரில் வைத்துக் கொண்டு இந்திரபிரத்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அர்ச்சுனன் பின்னால் பலராமனின் படைகள் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். ‘தானும் போர் செய்து எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை’ - என்று உணர்ந்த அவன் சுபத்திரையைத்