பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அறத்தின் குரல்

தங்கினர். சோலையில் மலர்ந்திருந்த பலவிதமான மலர்களைக் கொய்ய ஆரம்பித்தனர் பெண்கள். சோலையிலிருந்த குளிர்ப்பூம் பொய்கைகளில் நீராடி வெம்மையைத் தணித்துக் கொண்டனர். வேனிற் காலத்தில் தம் வெம்மையை உலகம் தாங்கொணாதபடி வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அவர்கள் தங்கியிருந்த பூஞ்சோலைக்கு வெளியே வெயில் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்ததால் எங்கும் கானல் பரந்து கொண்டிருந்தது. தரையில் ஈரப்பசை இன்றி வறண்டு போயிருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் சோலைக்குள்ளேயே ஓர் பெரிய மரத்தின் கீழ்க் குளிர்ந்த நிழலில் அர்ச்சுனனும் கண்ணபிரானும் உட்கார்ந்து பலவகையான செய்திகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தணர் ஒருவர் அவர்களுக்கு எதிரே வந்து ஏதோ கேட்க விரும்பும் பாவனையில் நின்றார். ‘தகதக’வென்று எரியும் தீக்கொழுந்து போன்ற நிறம், மார்பில் வெள்ளை நிறம் மின்னலைப் போலக் கண்ணைப் பறிக்க விளங்கும் முப்புரி நூல், செம்மை நிறத்தோடு பின்னிக் கிடந்து பிடரியில் புரளும் சடை, கம்பீரமான முகத்துக்கு மேலும் தனிச் சோபையை அளித்தான், அவர் செவியிலே அணிந்திருந்த மகர குண்டலங்கள். இத்தகைய தோற்றத்தோடு தங்கள் முன்னே வந்து நிற்கும் ‘அவர் யார்?’ என விளங்காமல் திகைத்தனர் அர்ச்சுனனும் கண்ணபிரானும். ஆனாலும் ‘அந்தணர்’ என்பதற்காக அவரை மரியாதையாக வரவேற்று வணங்கினார்கள். அந்தணர் மரியாதையையும் வணக்கத் தையும் ஏற்றுக் கொண்டு அருகில் அமர்ந்தார்.

“நான் அந்தணன்! உணவைக் கண்டு வெகு நாட்களாயிற்று. வெகு நாட்களாகப் பட்டினி என் பசி தீர உணவளிக்க வேண்டும்! நீங்கள் மறுக்காமல் அளிப்பீர்கள் என்று நம்பி வந்தேன்” -என்று குழிவிழுந்த கண்களால் நோக்கிக் கொண்டே அவிமணம் கமழும் வாயால் பரிதாபகரமான குரலில் வேண்டினார் அவர்.