பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
125
 


“அந்தணச் செல்வரே! தங்களுக்கு உணவளிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்” - என்றனர் கண்ணபிரானும் அர்ச்சுனனும். அவர்கள் கூறி முடிக்கவில்லை ! எதிரே அந்தணன் அமர்ந்திருந்த இடத்திற்கு தேஜோமயமான தோற்றத்துடனே அக்னி தேவர் நின்றார். “அக்னி பகவானே! தாங்கள் தாம் அந்தணராக உருமாறி வந்தீர்களா?” என்று வியந்து கூறி அர்ச்சுனனும் கண்ணபிரானும் மீண்டும் அவரை வணங்கினர்.

“எனக்குத் தேவையான உணவை இப்போது கூறுகிறேன் கேளுங்கள். ‘காண்டவம்’ -என்றோர் பெரிய வனம் இருக்கிறது. அது இந்திரனுடைய பாதுகாப்புக்கு உட் பட்டது. அந்த வனம் முழுவதையும் என் தீ நாக்குகளால் எரித்து வயிறார உண்டு பசி தீர வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. இந்த ஆசையை நான் நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இந்திரன் தடையாக இருந்து வருகின்றான். நான் வனத்தை உண்ணத் தொடங்கும்போதே மேகங்களால் மழையைப் பொழிந்து அவித்து விடுகின்றான் அவன் . இம் முறை அவன் அவ்வாறு அவிக்காமல் நீங்கள் எனக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்க வேண்டும்” -என்று தம் வேண்டுகோளை மேலும் விவரித்தார் அக்னி பகவான்.

“அந்தணரே! நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறமாட்டேன். காண்டவ வனத்தை இப்போதே நீர் புகுந்து எரித்து உண்ணலாம். இந்திரன் உம்மை அவித்துவிட முடியாமல் நான் பாதுகாக்கிறேன் இது உறுதி” என்று அர்ச்சுனன் அவருக்கு மீண்டும் உறுதியாக வாக்களித்தான். அக்னி பகவான் மனமகிழ்ந்து நன்றி செலுத்தினார். அர்ச்சுனன் இந்திரனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக அப்போதே போர்க்கோலம் கொண்டு புறப்பட்டான். தனக்கு உதவி செய்ய முன்வந்த அவனுக்கு வில் அம்பு முதலிய ஆயுதங்களை அக்கினி பகவானே அளித்தார். இந்திரன் தனக்குத் தந்தை முறை உடையவனாயினும் கனற்