பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
11
 


பொருள்களிலும் நாம் குரோதங்கொண்டு அழித்து விடவா செய்கிறோம்? அல்லது அவைகளாகவே அழிந்து விடத்தான் செய்கின்றனவா? இரண்டும் இல்லையே? வாழ்க்கையிலும் மறத்திற்கு இத்தகைய விலக்க இயலாத ஓர் இடம் ஏற்பட்டு இருக்கின்றது. கைப்பு என்றோர் சுவை இருப்பதனால்தானே இனிப்பின் பெருமை விளங்குகின்றது. அதுபோல, மறம், பாவம், தீமை என்ற இந்த விலக்கப்பட்ட குணங்களுக்கும் வாழ்வில் நிற்குமிடம் நிலைத்தவையாக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அறம், ஒழுக்கம், நேர்மை என்ற இந்த விதிக்கப்பட்ட குணங்களுக்கு உலக வாழ்வில் ஒளியும் பெருமையும் நிலைத்திருக்கின்றன. கைகேயியின் இரக்கமின்மையாலேயே இராமனுடைய பரந்த புகழ் என்னும் அமுதம் உலகுக்குப் பருகக் கிடைத்ததாகக் கம்பன் கூறுகின்றான். பகைப்புலனாக நிற்கவல்ல எதிர்மறைப் பண்பு ஒன்றினால்தான் காவிய குணமாகிய உடன்பாட்டுப் பண்பு ஒன்றை நிலை நிறுத்திக் காட்டுவதற்கு இயலும். இதிகாச காவியங்களாகிய இராமாயணம், பாரதம், முதலியவற்றின் கதைப் போக்கில் பகைப்புலனின் பண்பாலேயே காவியம் கூறக் கருதும் பொருளை வற்புறுத்தும் நிலையைக் காணலாம். காவியத்தில் எந்தச் சில பாத்திரங்களின் சார்பாக, அவற்றின் வெற்றி நோக்கிக் கதையாகச் சித்திரித்துச் சொல்லப்படுகின்றதோ, அந்தச் சில பாத்திரங்களின் வாழ்வே அந்தக் காவியம் முழுவதும் ஊடுருவி நிற்கின்றது எனக் கொள்ளலாம். இதிகாச காவியங்களைப் பொறுத்த வரையிலோ இது பெரிதும் பொருத்தமான மெய்யாகத் தோன்றுகிறது.

யாருடைய காவியம்?

மகாபாரதம் பெயரளவைக் கொண்டு நோக்கும் போது பாரத யுத்தத்தைப் பற்றிய கதை என்ற பொருளைத் தருமானாலும் உண்மையில் பாண்டவர் ஐவரின் வெற்றியை அறத்தின் வெற்றியாகச் சித்திரிப்பதே பாரதத்தின் தாத்பரியம்.