பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. வேள்வி நிகழ்ச்சிகள்

பாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன்.

தன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால்,