பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

133

இராசசூய வேள்விக்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” -நாரத முனிவரின் வேண்டுகோளுக்கு ஒருங்கு இணங்கினர் ஐவரும்.

முனிவர் உவகையோடு சென்றார். நாரத முனிவருக்கும் பாண்டவர்களுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்தபோது கண்ணபிரான் உடனிருந்தார். முனிவர் செல்கின்ற வரை அமைதியாகப் பேசாமலிருந்த கண்ணபிரான் அவர் சென்ற பின்பு பாண்டவர்களிடம் வேறு ஓர் யோசனையைக் கூறினார். வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்படுகின்ற எதிரிகளை முன்பே உணர்ந்து தொலைக்க முயல வேண்டும். சராசந்தன் என்றோர் அரக்கர் குலமன்னன் இருக்கிறான். மனிதர்களைக் கொண்டு செய்யும் ‘நரமேத யாகம்’ என்ற வேள்வியைச் செய்வதற்காக ஒரு பாவமும் அறியாத அரசர் பலரைச் சிறையில் அடைத்து வைத்திருக் கிறான். ஆற்றல் மிக்க மன்னர்கள் கூட அவனுக்கு பயந்து அடி பணிகிறார்கள். அவ்வளவு பயங்கரமான அந்த அரக்கர் குலமன்னனை முதலில் நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது வேள்விக்கு அவனால் பெரிய இடையூறு நேர்ந்தாலும் நேரலாம். கண்ணபிரான் இவ்வாறு கூறி நிறுத்தவும் தருமன் “அப்படியானால் அந்த அரக்கனைச் சாமர்த்தியமாகக் கொல்லும் வழியையும் தாங்களே கூறியருள் வேண்டும். தங்கள் யோசனையின்படி நாங்கள் நடப்போம்” -என்று வேண்டிக் கொண்டான்.

“தருமா! அவனை அழிப்பதற்கு எளிமையான வழியை ஏற்கனவே நான் கண்டுபிடித்து வைத்துள்ளேன். நானும், வீமனும், அர்ச்சுனனும், சராசந்தனின் கோட்டைக்கு மாறுவேடத்தில் அந்தணர்களைப் போலச் செல்கின்றோம்..”

“அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடுமா?”

“வீமன் ஒருவன் போதுமே, சராசந்தனைக் கொல்வதற்கு?”

“நல்லது! அப்படியால் போய் வெற்றியோடு திரும்பி வாருங்கள்” -தருமன் சம்மதித்தான். வீமன், அர்ச்சுனன்,