பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அறத்தின் குரல்


அர்ச்சுனனோ வயதில் எனக்கு மிகவும் இளையவன். எனவே அவனோடு போர் புரிவதும் எனக்கு இழுக்கு. இங்கிருப்பவர்களில் வீமன் ஒருவன்தான் என்னோடு சரிநிகர் சமானமாக நின்று போர் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவன். இன்று என்னோடு போரிட்டுச் சாகப் போகின்ற பாக்கியத்தை வீமனுக்கே கொடுக்கிறேன்” -சராசந்தன் குரலில் ஆத்திரமும் வெறியும் தொனித்தன, வீமனும் தானும் செய்யப் போகின்ற ‘போரின் முடிவு என்ன ஆகுமோ?’ -என்று ஒருவகையான கலக்கமும் அவன் மனத்தில் நிலவியது. எதற்கும் முன்னேற்பாடாகத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, அதன் பின் தான் போரில் இறங்குவதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு. அரசவையைச் சேர்ந்தவர்களையும் அமைச்சர் களையும் அழைத்து அப்போதே தன் புதல்வனுக்கு மணிமூடி சூட்டி அரியணையேற்றினான்.

வீமனுக்கும் சராசந்தனுக்கும் போர் தொடங்கியது. மலைச் சிகரங்களையொத்த தன் புயங்களைத் தட்டிக் கொண்டே வீமன் மேற் பாய்ந்தான் சராசந்தன். ‘உனக்கு நான் எந்த வகையிலும் இளைத்தவனில்லை’ என்று கூறுவது போல மதயானை என அவன் மேல் வீமனும் பாய்ந்தான். இருவருக்கும் போர் நிகழத் தொடங்கியது. போர் என்றால் சாமானியமான போரா அது? அண்ட சராசரங்களையும் நடுங்கி நிலைகுலையச் செய்யும் கோர யுத்தம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. வெற்றி தோல்வி இன்னார் புறம் என்று நினைக்க முடியாதபடி இருந்தது போர் நிகழ்ச்சி. ஆற்றல், வீரம், சரீரபலம் ஆகியவற்றிலும் சமமான இந்த இரு வீரர்களின் போர் பதினைந்து தினங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது. போரின் முடிவு நேரம் நெருங்க நெருங்கச் சராசந்தன் கை தளர்ந்து வீமன் கை ஓங்கியது. சராசந்தனுடைய உடலை வீமன் இரண்டு மூன்று முறை கிழித்துப் பிளந்து எறிந்தான்.

ஆனால், என்ன விந்தை? சராசந்தனின் பிறந்த உடல் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி உயிர் பெற்றெழுந்து வீமனோடு