பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அறத்தின் குரல்

துரியோதனாதியர், கண்ணன் முதலியவர்களுக்கும் பாரதக் கதைக்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்பதை இங்கே மறுக்க வில்லை. ஆனால் பாரதம் என்ற இந்த மாபெரும் காவியம் காட்டுகின்ற வாழ்க்கை துரியோதனாதியருடையதும் அன்று, கண்ணனுடையதும் அன்று, முற்றிலும் ஐவருடைய வாழ்க்கையே, துரியோதனாதியர், கண்ணன் என்னும் இவர்கள் இடையிடையே இக்காவியத்தில் வருகின்றார்கள் எனினும் பாண்டவர்களாகிய ஐவருக்கே வாழ்வுரிமை கொடுப்பது தான் இக்காவியத்தின் நிலைக்களன் ஆகும். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என்னும் இவர்கள் ஐவருடைய வாழ்க்கையில் அறத்திற்கு ஏற்பட்ட சோதனைகளும் இறுதியிலே அறம் வெற்றி பெற்றதும் ஆகிய இவற்றின் முழுவடிவமே பாரதம். இஃது அறத்தின் காவியம்; அறச்சார்போடன்றி வாழலாகாது என அறவாழ்விற்காகப் போரிட்ட ஐவர்கள் காவியம். அறமும் மறமும் மோதி முரண்பட்டுப் போராடும் போது நேர்மையையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ முயன்ற ஓர் ஐந்து சகோதரர்கள் அடைந்த இன்னல்களையும் முடிவில் தருமத்தின் வெற்றியை இவர்கள் வாழ்வின் வெற்றியாக விளக்கிப் பேசுவதையும் தனதாகக் கொண்டு சொல்லும் ஒரு நெடுங்கதைதான் மகாபாரதம். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதக் கதை அன்றே தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்திற்குரிய பெருங்கதையாகத் திகழ்ந்து வந்ததை அறிகிறோம். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியம் முதலிய நூல் வகைகளில் ஆங்காங்கே பாரதக் கதையைச் சிறப்பித்தும், சான்றாக எடுத்தாண்டும் போற்றியிருக்கக் காண்கிறோம். இதைத் தவிரப் பாரதக் கதைக்கு வேறோர் சிறப்பும் அமைந்துள்ளது. இராமாயணம் என்ற இதிகாச காவியத்தைத் தமிழில் இயற்றும் சிறந்த நோக்கம் கம்பர் ஒருவருக்கே ஏற்பட்டது. ஆனால் பாரதத்தையோ சங்க காலத்துப் பெருந்தேவனாரிலிருந்து நேற்றைய பாரதியார் வரை