பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அறத்தின் குரல்

போவதை அறிவித்து வெளிநாட்டு அரசர்களுக்கெல்லாம் தூதுவர்கள் மூலம் அழைப்புக்கள் அனுப்பப்பெற்றன. கண்ணபிரானும் பிற நாட்டு மன்னர்களும் இந்திரப் பிரத்த நகரத்தில் வந்து கூடினார்கள். மகாஞானியும் தபஸ்வியும் ஆகிய வேத வியாசரை உலூகன் சென்று அழைத்து வந்தான். இவர்கள் யாவரும் வந்து தங்கியிருப்பதனால் இந்திரப் பிரத்தம் ஒரு தனி அழகைப் பெற்று விட்டது போல் கோலாகலமாக விளங்கியது. மிகவும் சிறப்பான முறையில் வேள்வியை நடத்துவதற்குத் தக்கப்படி வேள்விச் சாலை அமைக்கப்பட்டது. அந்தணர்களும் மறையவர்களும் புனிதமான வேதகோஷங்களைச் செய்தனர். வேள்விச் செயல்களுக்குரிய மங்கல வேளை வந்தது. மூதறிஞராகிய வேதவியாசர் வேள்விக்குத் தலைவனாக தருமனையும் தலைவியாகத் திரெளபதியையும் நியமித்தார். ஏனைய சகோதரர்கள் தமையனின் ஆணை பெற்றுத் தத்தமக்குரிய பணிகளை ஏற்றுக் கொண்டனர். வேள்விக்கு வருகின்ற வர்களுக்கு உணவளித்து உபசரிக்க வீமன் பொறுப்பேற்றுக் கொண்டான். கஸ்தூரி, சந்தனம், பன்னீர், மலர் முதலிய அலங்காரப் பொருள்களை வழங்கும் பொறுப்பை அர்ச்சுனன் ஏற்றுக் கொண்டான். நகுல சகாதேவர்கள் வெற்றிலை பாக்கு முதலிய பொருள்களை வழங்கினர். தானம், பொருட்கொடை, சன்மானம் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவனான கர்ணனிடம் ஒப்பிக்கப்பட்டது. பொருள்களையெல்லாம் நிர்வாகிக்கும் தலைமைப் பொறுப்பைத் துரியோதனன் ஏற்றுக் கொண்டான்.

தருமனும் திரெளபதியும் மங்கல நீராடி வேள்விக்குரிய ஆடை அணிந்து ஓமகுண்டங்களுக்கு முன்பு வீற்றிருந்தனர். இடம் வலமாக அவர்கள் வீற்றிருந்த தோற்றம் சிவபெருமானும் உமாதேவியாருமே முறை மாறி இடம் வலமாக வீற்றிருப்பது போலக் காட்சியளித்தது. தீக்கொழுந்துகளின் செந்நிற ஒளி திரெளபதியின் பொன்னிற மேனிக்கு மெருகு