பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
13
 

ஒவ்வொரு புலவரும் தமிழ்க் காவியமாக ஒவ்வொரு நோக்குடன் அமைக்க ஆசையுற்றிருக்கின்றனர். இந்தக் கருத்துடனே காணும் போது இராமாயணத்தைக் காட்டிலும் பாரதம் தமிழ்ப்புலவர்களை மிகுதியாகக் கவர்ந்திருக்கின்றதென்ற உண்மை புலப்படும். கடவுள் மனிதனாக அவதரித்து அறத்தைக் காப்பதற்கு முயன்ற கதை இராமாயணம் என்றால், மானிடர்களாக உடன் பிறந்த ஐந்து சகோதரர்களின் வாழ்க்கையில் அறத்தைக் காக்க முயன்ற கதையே பாரதம். இராமன் என்ற அவதார புருஷன் சிலரையும் பலரையும் இயக்கி நிகழ்த்தின அவதார நாடகமே இராமாயணம். ஆனால் பாரதம் அவ்வாறில்லாமல் ஐவர் வாழ்க்கையில் அவரவர் இயக்கத்தைக் காட்டும் காவியம். இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களுக்கும் இடையிலுள்ள இந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாரதக் கவிஞர்கள்

தமிழில் தோன்றிய முதல் பாரத காவியமாகிய பெருந்தேவனார் பாரதம் இப்போது கிடைக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவராகிய இந்தப் பெருந்தேவனார் தவிர ஒன்பதாம் நூற்றாண்டின்ராகிய மற்றோர் பெருந்தேவனார் பாரத காவியத்தை வெண்பாக்களால் இயற்றினார். இப்பாரத வெண்பாவின் பெரும் பகுதி இப்பொழுது கிடைக்கின்றது. அச்சிட்டும் வெளியிட்டிருக்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக விரிவான முறையில் பெருங்காப்பிய அமைப்புடன் தமிழில் பாரதக் கதையை இயற்றிய ஒரே ஓர் ஆசிரியர் வில்லிப்புத்தூரார் தாம். நாலாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்பது பாடல்களால் வில்லி பாடிய அதே காவியத்தை வில்லிக்குப் பிற்பட்டவராகிய நல்லாப்பிள்ளை என்பவர் பதினையாயிரத்து முந்நூறு பாடல்களாகப் பெருக்கி அமைத்தார். வில்லியின் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாடல்களும்,