பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அறத்தின் குரல்


கிடக்குமானால் மதயானை, அதனை மிக எளிதில் வென்றுவிடலாம். புகழ்மயக்கத்தில் பதுங்கிக் கிடக்கும் இந்தப் பாண்டவர்களை இப்போது நாம் வென்று விடுவது சுலபம்” -சகுனி இவ்வாறு கூறி முடிக்கவும் அவனருகில் நின்ற துரியோதனன் தம்பி துச்சாதனனுக்கும் துணிவு வந்தது.

“பாண்டவர்களின் இந்தப் புகழ் நிலா ஒளியைப் போல மென்மையானது. நம்முடைய ஆற்றலோ கதிரவனின் சக்தி வாய்ந்த கதிர்களை ஒத்தவை. பாண்டவர்கள் எவ்வளவு தான் சிறப்புற்றிருந்தாலும் நம் ஆற்றலுக்கு முன்னால் அது எம்மாத்திரம்?” -துச்சாதனனும் ஒத்துப் பாடினான். இந்த மூன்று பேருடைய பேச்சையும் கேட்ட துரியோதனனுக்குத் தன்னைப் பற்றிய கர்வம் அளவு கடந்து தோன்றிவிட்டது. நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று இறுமாப்புக் கொண்டுவிட்டான் அவன். திருதராட்டினன், வீட்டுமன், விதுரன், துரோணன் முதலிய பெரியோர்களும் தன்னோடு அந்த அவையில் இருக்கிறார்கள் என்பதையே அவன் மறந்து விட்டான். அகங்காரம் அவனை மறக்கச் செய்துவிட்டது என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“தருமன் திசைகள் நான்கையும் வென்று சிறப்புடன் ஓர் வேள்வியையும் செய்து அதற்குத் தலைவனானான். அவன் தம்பியர்களும் அவனும் ஆற்றலிற் குன்றாத சிறந்த வீரர்கள், பாண்டவர்களது ஆற்றவை இதற்கு மேலும் நாம் வளர விடுவோமானால் அவர்கள் நம்மையே வென்று விடவும் முயற்சி செய்வார்கள். முள்ளோடு கூடிய மரத்தை அது வளர்ந்து பெரிதாவதற்கு முன்பே கிள்ளி எறிந்து அழித்து விடுதல் வேண்டும். அந்த மரம் முற்றிவளரும் படியாக விட்டுவிட்டால் பின்பு கோடாரியால் கூட அதை வெட்டிச் சாய்க்க முடியாது. எனவே பாண்டவர்களை எல்லாமிழந்து தோல்வியுறச் செய்யும் முயற்சியில் நாம் இப்பொழுதே ஈடுபட வேண்டும். போர் செய்தோ, சூழ்ச்சி புரிந்தோ அவர்களை வெல்ல வேண்டும். பாண்டவர்கள் செல்வமிழந்து வாழ்விழந்து வெறுங்கையர்களாய் நிற்பதைக் கண்டு நான்