பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

அறத்தின் குரல்

வரப்பட்டனர். “கண்டவர்கள் அதிசயித்து வியக்கத்தக்க அழகான மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள்” என்ற கட்டளை பிறந்தது. துரியோதனனின் ஆணைக்குட்பட்ட குறுநில மன்னர்கள் மண்டபப் பணிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கினர். மண்டப வேலை மிகவும் துரிதமாக வளர்ந்து வந்தது. தீய எண்ணங்களும் அவற்றின் விளைவுகளும் எப்போதுமே இது போல் அசாத்தியமாக வேகத்தோடு வளர்வது தான் வழக்கம். ஆனால், ‘வேகமான வளர்ச்சிக்கு எல்லாம் வேகமான அழிவும் தொடர்கிறது’ -என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்து அழகெல்லாம் கூடி ஒன்று திரண்டு விட்டதோ என்று சொல்லுமாறு மண்டபம் உருவாகி முடிந்தது. தன் வஞ்சகத்தின் முதல்படியாகிய அந்த மண்டபத்தைக் கண்கள் நிறையக் கண்டு மகிழ்ந்தான் துரியோதனன். பின்பு கர்ணன் சகுனி முதலிய தன் தோழர்களை அழைத்துக் கொண்டு தந்தை திருதராட்டிரனைப் பார்த்து அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காகச் சென்றான். சகுனி, கர்ணன் ஆகியோர் இடையிடையே விளக்கம் கூறத் துரியோதனன், ‘பாண்டவர்களை மண்டபம் காண அழைக்க வேண்டும் - அப்படியே அவர்களைச் சூதினால் வெல்ல வேண்டும்’ என்ற கருத்தைத் தன் தந்தைக்குக் கூறினான். திருதராட்டிரனுக்கிருந்த சிறிதளவு கருணையையும், நல்ல உள்ளத்தையும் கூட அந்த மூவருமாகச் சேர்ந்து போக்கிவிட்டார்கள். புறக்கண்களை மட்டும் இழந்திருந்த அவன், அவர்களுடைய வஞ்சகம் நிறைந்த பேச்சால் அகக் கண்களையும் பறி கொடுத்தான். பாண்டவர்களை மண்டபம் காண அழைப்பது போல் அழைத்துச் சூதாடி வெல்ல வேண்டும் என்ற சூழ்ச்சிக்கு அவனும் இணங்கினான். பெருமைக்குணம் படைத்த தந்தை சிறுமைக்குத் தலையசைத்தான்.