பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
156
அறத்தின் குரல்
 

முகத்தையும் எழுதிக் கையில் கொடுத்தபோது விதுரனால் மறுத்துப் பேச முடியவில்லை. பேசாமல் இருந்து விட்டான். துரியோதனனுக்கு இருப்பதைப் போல, கூசாமல் பெரியோர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் தனக்கும் இல்லாமல் போய் விட்டதே என்ற விநோதமான ஏக்கம் அவனுக்கு இப்போது உண்டாயிற்று. மனத்தையும் அதன் எண்ணங்களையும் மறைத்துக் கொண்டு இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கித் தூது புறப்பட்டான் அவன்.

‘பாண்டவர் நலனில் அக்கறை கொண்ட தானே அவர்களைச் சூழ்ச்சியில் மாட்டி வைக்கலாமா?’ என்றெண்ணும்போது, ‘நாம் என்ன செய்யலாம்? கடமைக்காகத்தானே தூது செல்கிறோம்!’ என்ற சமாதானமும் அவன் மனத்திலேயே உண்டாகும். விதுரன் தூது புறப்பட்டு வருகின்ற செய்தி பாண்டவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. சிறிய தந்தை முறையினராகிய அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இந்திரப்பிரத்த நகரத்தின் அழகையும் செல்வ வளத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கொண்டே நகருக்குள் பிரவேசித்தான் விதுரன்.

‘இந்த அழகிய நகரத்திற்குரியவர்களின் நலம் நிறைந்த வாழ்வு இன்னும் சில நாட்களில் என்ன கதியை அடையப் போகிறதோ? விதியின் போக்கை என்னவென்று சொல்வது?’ -என்று அவன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். பாண்டவ சகோதரர்கள் ஐவரும் விதுரனை அன்போடும் உவகையோடும் வரவேற்று உபசரித்தனர். விதுரன் திருதராட்டிர மன்னனின் திருமுகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு உங்களை அத்தினாபுரிக்கு அழைத்து வருமாறு உங்கள் பெரிய தந்தை திருதராட்டிர மன்னர் என்னை இங்கே தூதுவனாக அனுப்பினார்’ என்று வந்த காரணத்தைக் கூறினார் விதுரன் கொடுத்த திருமுகத்தைப் படித்து முடித்த தருமன், “இந்த அழைப்பின் அந்தரங்கமான நோக்கம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை” - என்றான். துரியோதனன், சகுனி முதலியவர்கள் செய்திருக்கும் சூழ்ச்சி