பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

157

நிறைந்த தீர்மானத்தைப் பாண்டவர்களிடம் தெளிவாகக் கூறிவிடலாமா? வேண்டாமா? -என்று ஒரு கணம் தனக்குள் யோசித்தான். கூறி விடுவதனால் எந்தத் தவறும் இல்லையென்று முடிவு செய்து கொண்டபின் கூறிவிடுவது என்றே துணிந்தான்.

“தருமா! திருதராட்டிரன், உங்களுக்குக் கொடுத்துவிட்டிருக்கும் திருமுகத்தில் என்னவோ ‘மண்டபம் காண்பதற்காக வரவேண்டும்’ -என்று அழைத்திருக்கிறான். வெளிப்படையான இந்த அழைப்பில் வேறோர் சூழ்ச்சியும் மறைந்திருக்கிறது. நீங்கள் மண்டபம் காணச் செல்லும் போது சகுனியின் துணைக் கொண்டு துரியோதனன் உங்களைச் சூதாடுவதற்கு அழைப்பான். நீங்கள் இணங்கினால் உங்களோடு சூதாடி உங்களுடைய எல்லா உடைமைகளையும் கவர்ந்து கொள்ள வேண்டுமென்று கெளரவர்கள் சூழ்ச்சி செய்துள்ளார்கள். உங்களை அழைத்திருப்பதின் அந்தரங்கமான நோக்கம் இது தான்.”

விதுரன் கூறியவற்றைக் கேட்டதும் தருமனுக்கு உண்மை தெளிவாக விளங்கிற்று. ‘சூதாட்டத்திற்காகத் தன்னை அழைக்கிறார்கள்’ -என்று எண்ணும் போதே தருமன் உள்ளம் புண்பட்டது. ‘ஒரு மனிதனின் எல்லாவிதமான சிறப்புகளும் அழிவதற்குச் சூது காரணமாக அமைய முடியும். அறிவு, சத்தியம், ஆண்மை முதலிய உயரிய குணம் நலன்களெல்லாம் சூதாடத் தொடங்குகிறவனிடமிருந்து ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. கள், காமம், சூது என்று இவை மூன்றையும் விலக்கப்பட வேண்டிய குணங்களாக அறிஞர்கள் கூறுவார்கள். இந்த மூன்றிலும் கூட இறுதியிலுள்ள சூது மிகவும் பயங்கரமான ஒன்றாகும். எத்தனையோ மன்னாதி மன்னர்களையும் நற்குடிப் பிறந்தவர்களையும் கெட்டழிந்து போகச் செய்திருக்கிறது இந்தச் சூது கள்ளும், காமமும் மனிதனுடைய உடலைப் பேரளவிலும் அறிவைச் சிற்றளவிலும் தான் பாதிக்கின்றன. ஆனால் சூதோ மனிதனுடைய ஒழுக்கம், சத்தியம், அறிவு