பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அறத்தின் குரல்

எல்லாவற்றையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ‘சத்தியம், தருமம்’ -என்னும் இவை இரண்டை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னையும் இந்தச் சூது பாதிக்கும்படியாக விடலாமா? இல்லை! ஒருபோதுமில்லை. ‘சூதாட்டத்தினால் தருமபுத்திரனுடைய வாழ்க்கையில் மிகப்பெரியதோர் களங்கம் புகுந்து விட்டது’ -என்று நாளைய உலகில் இப்படி ஓர் அவச் சொல் எழும்படியாக விடலாமா? கூடாது! கூடவே கூடாது’ -தருமனுடைய மனத்திற்குள் ஒரு சிறு போராட்டம் நிகழ்ந்து ஓய்ந்தது.

திருதராட்டிரனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதா? புறக்கணிப்பதா? என்று போராடி முடிவு காண இயலாமல் நின்றது அவன் மனம். அரசவையைச் சேர்ந்த பெரியோர் களிடமும், விதுரனிடமும், தன் சகோதரர்களிடமும் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்த பின்பே ஒரு முடிவுக்கு வரலாமென்று தோன்றியது அவனுக்கு

“உலகில் நாமெல்லாம் எண்ணுகின்ற எண்ணங்களைக் காட்டிலும் விதியின் எண்ணம் வலிமை வாய்ந்ததாக இருக்கின்றது. நம் எண்ணப்படி. விதி நம்மை வாழ விடுவதில்லை. விதியின் எண்ணத்தையோ நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சிறிய தந்தையே! கெளரவர்கள் எங்களை எதற்காக அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்ற மர்மம் எங்களைக் காட்டிலும் உங்களுக்கு நுணுக்கமாக விளங்கியிருக்கிறது. எனவே நீங்கள் தான் இதைப் பற்றி எங்களுக்கும் பயன்படும் படியான யோசனையைக் கூற முடியும் நாங்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? அருள் கூர்ந்து உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்”... என்று தருமன் விதுரனை வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளில் பணிவும் குழைவும், சிறிய தந்தை என்ற உறவுரிமையும் நன்கு வெளிப்பட்டன

“தருமா! உரிமையும் அன்பும் கலந்த உன்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நான் பதில் சொல்லாமல் இருக்க