பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
159
 

முடியாது. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன், கேட்டுக் கொள்!”

“சொல்லுங்கள்! கேட்கிறேன்.....”

“சூதாட்டத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இப்போது நீ என்னவெல்லாம் சிந்தித்துப் பதறுகின்றாயோ அவற்றையெல்லாம் துரியோதனனுடைய அவையில் தானே கூறினேன். ‘சூதாட்ட நினைவு கூடாது’ -என்று சொல்லித் தடுப்பதற்கு முயன்றேன். ஆனால் என் சொற்களை அங்கே யாராவது பொருட்படுத்திக் கேட்டால் தானே? பிறருடைய சிந்தனையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டு கவலைப்படக்கூடாது’ -என்று அன்றிலிருந்து ஒரு சங்கல்பம் எனக்கு உண்டாகியிருக்கிறது. எனவே உன் பெரிய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பதை நீயே சிந்தித்து உன் மனத்தில் தோன்றும் முடிவின்படி நடந்து கொள்வதுதான் நல்லது! இவை தவிர இப்பொழுது நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை’என்று பற்றில்லாத முறையில் அமைந்து விட்டது விதுரனின் பதில்.

இந்தப் பதிலைப் பற்றித் தருமன் தனக்குள் சிந்திக்க ஆரம்பிக்கு முன் வீமன் குறுக்கிட்டுப் பேசினான். “அண்ணா! பொறுமையையும் உறவு முறையையும் நம்பி வீண் போக இனியும் நாம் பேதையர்களில்லை. எந்த வகையிலாவது நம்முடைய வாழ்க்கையைக் கெடுக்கவேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கௌரவர்கள். நாம் இளைஞர்களாக இருந்த காலத்திலிருந்து துரியோதனாதியர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மை அழித்து விடுவதற்கு முயன்று வருகின்றார்கள். இப்போது நம்மை மறைமுகமாகச் சூதாட அழைப்பதன் நோக்கம் தான் என்ன? நம்முடைய அரசுரிமையையும், உரிமைக்குட்பட்ட சகல விதமான உடைமைகளையும் பறித்துக் கொள்ள வேண்டுமென்பது தானே அவர்களது எண்ணம்? விஷவிருட்சத்தைப் போன்ற