பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164
அறத்தின் குரல்
 

வரவைத் தந்தைக்கு அறிவிக்குமுகமாக அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருதராட்டிரன் அன்போடு தன் தம்பியின் மக்களைத் தழுவிக் கொண்டு நிறை நெஞ்சுடனே அவர்களுக்கு ஆசி கூறினான். நீண்ட நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பின்பு “நீங்கள் வீடுமன், காந்தாரி முதலியவர்களை இன்னும் சந்தித்து வணங்கி ஆசிபெற வில்லையே?” என்று கேட்டான், “இல்லை! இனிமேல் தான் அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றான் தருமன். “அப்படியானால் சென்று அவர்களைச் சந்தித்து விட்டு வாருங்கள். சகோதரர்கள் திருதராட்டிரன் சொற்படியே செய்யக் கருதி அவனை வணங்கிப் புறப்பட்டனர். காந்தாரியை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் புறப்பட்டபோது திரெளபதி மட்டும் அங்கேயே தங்கினாள். அறிவிலும் வீரம், விரதம் முதலியவற்றிலும் தனக்கு இணையற்ற மூதறிவாளராகிய வீட்டுமனைக் கண்டு வணங்கியபோது, “எல்லா நலங்களும் பெறுவீர்களாக!” என்று வாழ்த்தினார் அவர். இவர்களைச் சந்தித்து வணங்கி முடித்தபின் தங்களுக்கு அந்தரங்க முடையவரும் சிற்றப்பனும் ஆகிய விதுரனின் அரண் மனைக்குச் சென்றனர், அவர்கள் அங்கே செல்லும் போது. இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். விதுரன் மாளிகையிலேயே இருந்தான். மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு இரவு உணவை அங்கேயே உண்டனர். உணவுக்குப்பின் அவர்கள் சற்று நேரம் நிலா முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். காந்தாரியுடன் தங்கியிருந்த திரெளபதியும் விதுரன் மாளிகைக்கே அழைத்து வரப்பட்டிருந்தாள். தம்பியர்கள், திரெளபதி, விதுரன் இவர்களெல்லோரும் உறங்குவதற்குச் சென்ற பின்பும் தருமன் மட்டும் அப்படியே நிலா முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

‘வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகளெல்லாம் ஏற்படுகின்றன? மெய்ம்மையையும் அறத்தையும் காப்பதற்