பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அறத்தின் குரல்


‘தருமனின் அமைதி தங்கள் சூழ்ச்சிக்குத் தோல்வியாகி விடுமோ’ -என்று படபடப்பும் ஆத்திரமும் கொண்டு விட்டான் கர்ணன். அந்த ஆத்திரத்தில் ‘என்ன பேசுகிறோம்? நம் பேச்சு யார் யாருக்குக் கோபத்தை உண்டாக்கும்’ -என்ற சிந்தனையே இன்றிப் பேசி விட்டான் கர்ணன். “தருமா! நீ வீரமுள்ள ஓர் ஆண் மகன் தானா? விளையாட்டாகச் சிறிது நேரம் சூதாடுவதற்கு அழைத்தால் அதற்கு இவ்வளவு தூரம் நடுங்கிப் பதறுவானேன்? கேவலம் சூதாட்டத்திற்கே நீ இவ்வளவு நடுங்கினால் போர்களத்தில் போர் செய்வதற்கு இன்னும் எவ்வளவு நடுங்குவாயோ? நீயும் உன் சகோதரர்களும் வெட்கமுள்ளவர்களாக இருந்தால் இப்போதே உங்கள் இந்திரப்பிரத்த நகரத்திற்கு திரும்பி ஓடிப்போய்க் கோட்டைக் கதவுகளைத் தாழிட்டு விட்டு ஒளிந்து கொள்ளுங்கள்.” கர்ணன் இப்படிச் சொல்லி வாயை மூடவில்லை!

படீரென்று ஒரு சப்தம் கேட்டது. வேறொன்றுமில்லை! வில்லை நாணேற்றுகின்ற சப்தம்தான். அவையிலுள்ள அத்தனை பேரும் தர்மன் உட்படத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். கனல் கக்கும் விழிகளோடு கர்ணனின் வாயைக் குறி வைத்து வில்லை நாணேற்றி அம்பைத் தொடுக்கத் தயாராகிவிட்டான் அர்ச்சுனன். இன்னும் ஒரு கணம்!.. ஒரே ஒரு கணம் கழிந்திருந்தால் அர்ச்சுனனின் அம்பு கர்ணனின் வாயை உதடுகளோடு அறுத்துக் கீழே வீழ்த்தியிருக்கும்.

“இந்த மண்டபத்தை கட்டியதும், இதைப் பார்ப்பதற்காக என்று எங்களை வரவழைத்ததும், இப்போது ‘பொழுது போக்காகச் சூதாடலாம்’ என்று சூழ்ச்சியில் மாட்டி வைக்க முயல்வதும் உங்கள் வஞ்சகத் திட்டத்தின் விளைவுகள். எங்களுக்கு எல்லாம் தெரியும்! ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இதோ, இந்தக் கர்ணன் பொறுமையே உருவான எங்கள் தமையனைப் பார்த்து அருவருக்கத்தக்க முறையில் இழிந்த சொற்களைப் பேசுகிறான். தகுதியுணர்ந்து பேசத் தெரியாத