பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

169

இவன் நாவுக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன்” என்று அர்ச்சுனன் மீண்டும் நாணை இழுத்து அம்பைக் குறி வைத்து செலுத்த முயன்றான். அவையிலிருந்தவர்கள் ஒன்றும் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். கர்ணனும், அர்ச்சுனனை எதிர்க்கத் தோன்றாமல் செதுக்கி வைத்த சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அவன் வாயை அம்பு துளைப்பதும் நாவு அறுபடுவதும் தவறாது என்றே எல்லோரும் எண்ணி விட்டனர்.

இந்த இக்கட்டான நிலையில், “தம்பீ பொறு” என்று ஒரு சாந்தம் நிறைந்த குரல் அர்ச்சுனன் செவியில் நுழைந்தது. குரல் கேட்டதை அடுத்து சினத்தினால் விம்மித் தணிந்து கொண்டிருந்த அவனது பருத்த தோள்களில் மெல்லியதோர் அன்புக்கரம் விழுந்தது. அர்ச்சுனன் கையை வில்லிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தருமன் அவனருகில் நின்று கொண்டிருந்தான். வில் அவனுடைய கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நெருப்பை அணைக்கும் நீரைப் போலத் தன் பார்வை ஒன்றினாலேயே அர்ச்சுனனின் ஆத்திரத்தைப் போக்கி விட்டான் தருமன். ‘தன் வாய் அறுந்து விழுவது உறுதி‘ -என்று நடுநடுங்கியவாறே நின்று கொண்டிருந்த கர்ணனுக்கு இப்போது தான் நடுக்கம் நின்று நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அர்ச்சுனன் சினம் தணிந்து தன் இடத்தில் அமர்ந்து விட்டான். இதை அடுத்துத் தருமன் கூறிய சொற்கள் தாம் யாவரையும் பேராச்சரியம் கொண்டு மலைத்துப் போகும்படி செய்தன.

“கர்ணா! சினம் கொண்டு விட்டால் ‘இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசலாம். இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசக் கூடாது’ என்ற வரம்பே இல்லாமல் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசிவிடலாமா? ‘போர் செய்யத் தெரியாத கோழை’ என்றாய் என்னை. வீரமும் போரும் தெரிந்த மெய்யான ஆண்மையாளர்களுக்கு உன்னைப் போலத் தற்புகழ்ச்சி செய்யத் தெரியாது. நான் போர் செய்ய