பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

171

வைக்கப்பட்டது. சகுனிக்குச் சூதாட்டத்திலுள்ள எல்லாத் தந்திரங்களும் நன்றாகத் தெரியும். ‘என்ன மாயம் செய்து அவன் எப்படிக் காயை உருட்டுகிறான்?’ என்றே விளங்கவில்லை. வெற்றி அவன் பக்கமே சேர்கிறது. முதல் ஆட்டத்திலேயே தருமனுக்கு தோல்வி! முத்து மாலை தருமனிடமிருந்து சகுனியின் கைகளுக்கு மாறியது. இரண்டாவது பந்தயமாகக் கண்ணபிரானால் தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட தேர் ஒன்றை வைத்து ஆடினான் தருமன். சூதாட்டக் காய்களைச் சகுனி மந்திரம் கூறி வசியப்படுத்திவிட்டானோ என்று கூறும்படி இரண்டாம் பந்தயத்திலும் வெற்றி. சகுனியின் பக்கமே விளைந்தது. கள்ளைக் குடிக்கக் குடிக்க அதுகாரணமாக எழுகின்ற வெறியைப் போன்றது சூதாட்டத்தில் ஒருவருக்கு உண்டாகும் ஆசை ‘இழந்த பொருள்களை மீட்க வேண்டும்’ என்ற ஆசையினால் மீண்டும் மீண்டும் இழந்து கொண்டே போவது சூதாட்டத்தில் தோற்றவர்களின் இயல்பு. இந்த நிலையில் தருமனுடைய மன இயல்வும் இதே விதிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. தருமன் தன்னுடைய நால்வகைப் படைகளில், யானைப்படை, குதிரைப்படை முதலியவற்றை வைத்துத் தோற்றான். அரண்மனை உபயோகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேர்களை வைத்து இழந்தான். நாடுகள், அரசு, அரசாள்கின்ற உரிமை, அழகிலும் கலைகளிலும் சிறந்த உரிமை மகளிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வைத்துப் பறி கொடுத்தான். சகுனி சிரித்துக் கொண்டே ஆடினான். துரியோதனன் கர்ணன், துச்சாதனன் முதலியவர்களும் சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். தருமனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. தானும் தம் தம்பியர்களும், திரெளபதியும்தான் இப்போது தருமனின் உடைமைகள், அடுத்து என்ன செய்வது? எதைப் பந்தயமாக வைத்து ஆடுவது? என்று தெரியாமல் கலங்கிய மனத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்த தருமனைச் சகுனி வலுவில் தானாகவே வம்புக்கு இழுத்தான்.