பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172
அறத்தின் குரல்
 


“ஏன் தயங்குகிறாய் தருமா? உன்னையே ஓர் ஆட்டத்துக்குப் பந்தயமாக வைத்து ஆடேன்! நீயும் தோற்றுவிட்டால் உன் தம்பியர் நால்வரையும் அதற்கு அடுத்த ஆட்டத்திற் பந்தயமாக வைக்கலாமே!” -இப்படிக் கூறிய சகுனியைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்தனர், வீமனும் அர்ச்சுனனும். ஆனால் விளையாட்டு வெறியில் மூழ்கிக் கிடந்த தருமனுக்குச் சிந்தனை செய்ய மனம் இருந்தால் தானே? சகுனியின் கூற்றையே யோசனையாக ஏற்றுக் கொண்டு அடுத்த ஆட்டத்தை உடனே ஆரம்பித்தான் அவன்.

“சகுனி! இந்த ஆட்டத்திற்கு என்னையே பந்தயமாக வைக்கிறேன். விளையாடு பார்க்கலாம்...”

சகுனி தன் சொல் உடனே பலித்ததை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டே காய்களை உருட்டினான். காய்கள் அவனை ஏமாற்றவில்லை. அவன் சொற்படியே உருண்டன்! தருமன் தன்னையே தோற்றுக் கொண்டு விட்டான். தானே தன் தலையில் நெருப்பை அள்ளி வைத்துக் கொண்ட மாதிரி தன்னைத் தோற்ற ஏமாற்றச் சாயை நெஞ்சில் அழிவதற்கு முன்பே, “என் தம்பிமார் நால்வரையும் பந்தயமாக வைக்கிறேன். இந்த ஆட்டத்திற்குக் காய்களை உருட்டுக” என்று கூசாமல் கூறினான் தருமன். அவனுக்குச் சூதாட்ட வெறி பிறந்துவிட்டது. விதியின் கைக் கருவிகள் தாமே அந்தச் சூதாட்டக் காய்கள்? அவை வழக்கம் போலவே சொல்லி வைத்தாற் போலச் சகுனிக்குச் சாதகமாக உருண்டன. தருமனுக்கு அதே நிலையில் அப்படியே சுவாசம் நின்றுவிடும் போல ஆகிவிட்டது. திக்பிரமை பிடித்துப் போய்ச் சிலையாக உட்கார்ந்து விட்டான்.

“என்ன தருமா! எல்லாவற்றையும் தோற்றாகிவிட்டது. இனிமேல் தோற்பதற்கு ஒரு பொருளும் இல்லை போலிருக்கிறது?” -வெந்த புண்ணில் புண்ணுக்கு மருந்திட வேண்டிய மருத்துவனே வேலை நுழைத்தாற் போலச் சகுனி