பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

175

இன்றே செத்துப் போய்விட்டன என்று எண்ணிக் கொள்!” தன் ஆத்திரம் முழுவதையும் பேச்சில் கொட்டி விட்டான் விதுரன்.

ஆனால் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டிருந்த திருதராட்டிரன் விதுரனுடைய பேச்சை இலட்சியம் செய்யாமலே இருந்து விட்டான். கண்களை இழந்த அவன் இப்போது பேசுவதற்கு இயலாமல் வாயையும் இழந்து ஊமை ஆகிவிட்டானோ? -என்று கண்டோர் எண்ணுமாறு தோன்றியது அவனுடைய குரூரமான அந்த மெளனம். இனியும் இவனை வேண்டிக் கொள்வதில் பயனில்லை. எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கட்டும்! விதியைத் தடுக்க நாம் யார்? -எண்றெண்ணி மனம் அமைந்தான் விதுரன்.

சகுனி கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிப் போன தருமன், ‘திரெளபதியையும் ஒரு பந்தயமாக வைத்துத் தான் பார்ப்போமே’ -என்று எண்ணத் தொடங்கி விட்டான். ‘இழந்த பொருள்களை எல்லாம் மீண்டும் பெறலாம்’ -என்ற நம்பிக்கையால் இந்தத் துர் எண்ணம் விநாடிக்கு விநாடி பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது. தருமனுடைய அறப்பண்பு, சத்தியம், ஒழுக்கம் எல்லாம் அந்த விநாடி அவனை விட்டு இலட்சோப இலட்சம் காத தூரம் விலகி ஓடிப் போய்விட்டன. சூதுவெறி அவன் பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது.

“சரி திரெளபதியே பந்தயம். இறுதியாட்டம் இது தான்! விளையாடு” -தருமனுடைய வாயிலிருந்து சொற்கள் வெளிவந்து முடியவில்லை. சகுனி மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இறுதி ஆட்டத்திற்காகக் காய்களை ஊருட்டிவிட்டான். பொல்லாக் காய்களும் உருண்டன. மனிதர்களில் நல்லவர்கள் உண்டு. தீயவர்கள் உண்டு! நல்லவைகள் உண்டு, தீயவைகள் உண்டு. நேர்மை நீதிகள் உண்டு! வஞ்சகம் வம்புகள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டு இருக்கிறோம். கேவலம் மரத்தினால் செய்த