பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
177
 

தங்களுக்கு உறவினர்களாயிற்றே! என்றெண்ணியாவது இந்த சூதாட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். தருமன் பொறுமை சாலிதான். அவனால் இந்தத் தோல்விகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்து விட முடியும். ஆனால் வீமன் கோபம் மிக்கவன். அருச்சுனனுக்கோ சினத்தால் கண்கள் இரண்டும் இப்போதே சிவந்து விட்டன. இதன் விளைவு என்ன ஆகுமோ?”

“தன் புதல்வர்கள் பாண்டவர்களுக்குச் செய்யும் தீமைகளைக் கண்டும் பேசாமல் இருக்கிறான் இந்தத் திருதராட்டிரன். நெருப்பைக் கைகளால் ஓங்கி அறைந்தால் கைகள் தாம் சுடும். பாண்டவர்கள் நெருப்பைப் போலத் தூயவர்கள். அந்த நெருப்போடு மோதுகிறார்கள் குற்றம் நிறைந்த இந்தக் கெளரவர்கள். இவர்கள் அழியப் போவது நிச்சயம்“ மேற்கண்டவாறு பலவிதமான பேச்சுக்கள் அந்தப் பெரிய அவையிலிருந்த மக்களிடையே நிலவின.

துரியோதனன் இறுமாப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். தருமதேவதை எங்கே இருக்கிறது என்று அப்போது தேடிப் பார்த்திருந்தால் அது மானசீகமாக அழுது கொண்டிருந்ததைக் கண்டிருக்கலாம். “தருமன் யாவற்றையும் எங்களிடம் தோற்றுவிட்டான். இது அவனுடைய போதாதகாலத்தைத்தான் காட்டுகிறது. அந்தத் தேவடியாள் திரெளபதி அன்று இந்திரபிரத்த நகரத்தில் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தாள். மனங்குமுறிப் பெரிதும் வருந்தினேன். இன்று, இதோ இன்னும் சிறிது நேரத்தில் அந்தத் தேவடியாளைக் கண்டு நான் ஏளனச் சிரிப்பு சிரிக்கப் போகிறேன். தருமனும் அவனுடைய தம்பியர்களும் கட்டுக்கடங்காத கர்வம் பிடித்துத் திரிந்தார்கள். இப்போது அவர்களுடைய கர்வம் ஒடுங்கும் நேரம் வந்து விட்டது.” அவையிலுள்ளோர் யாவரும் கேட்கும்படியாக இப்படி இகழ்ந்து கூறினான் துரியோதனன். வயது முதிர்ந்த சான்றோராகிய வீட்டுமரை இச்சொற்கள் பெரிதும் புண்படுத்தின.

அ.கு. -12