பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதமும் பாத்திரங்களும்

பாரதக் கதையின் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, வாழ்க்கைக்குத் தேவையான நன்மைப் பாற்படுகின்ற உடன்பாட்டுக் குணங்களையும் வாழ்க்கைக்குத் தேவையற்ற தீமைப் பாற்படும் எதிர்மறைக் குணங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளுகின்றோம். ‘அறமே குறிக்கோள்' என்று நிற்போரையும் அங்கே காண்கின்றோம். ‘ஆண்மையே யாவும் - என்று பேசுவோரையும் அங்கே காண்கின்றோம், ‘மறமும், தீமையும், சூதும், வஞ்சகமுமே வாழ்வு’ என்று மயங்கித் தவறான வழிகளால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுபவர்களையும் காண்கின்றோம். மனித வாழ்க்கையில் என்றுமே நிலைத்த அமைப்போடு இடம் பெற்றிருக்கும் உத்தம், அதம், மத்திய குணங்கள் பாரதக் கதையின் போக்கிலேயே முற்றிலும் முழுமையாக அமைந்திருக்கின்றன. பாத்திரங்களின் மூலமாக அந்தக் குணங்களைப் புரிந்து தெளிவு கொள்கின்ற காவிய நேயர் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையிலே ‘கடைப்பிடிக்க வேண்டிய குணங்கள் யாவை? நீக்க வேண்டிய குணங்கள் யாவை?’ என்பதை நன்றாக உணர்வதற்கு முடிகின்றது. இத்தகைய பயன் கனிந்த பேருணர்வை உண்டாக்குவதுதான் உன்னதமான காவியம் ஒன்றின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பாரதம் ஓர் உன்னத காவியமாகையால்தான் அதன் குறிக்கோளும் இவ்வாறு பொருந்தியிருக்கிறது. இப்பொருத்தத்தைச் சற்றே விளக்கமாகக் காண்போம். ‘தருமன்’ - என்று ஒரு பாத்திரம் பாரதக்கதையின் உயிர்நாடி. அன்பு, அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் என இவ்வாறு வரும் மேனிலைப் பண்புகளாலேயே படைக்கப்பட்ட பாத்திரம், தன் வாழ்வைச் சுற்றி எழுகின்ற எண்ணத் தொலையாத சூழ்ச்சிகளையும் சோதனைகளையும், மனத்திற்குத் தோன்றியபடி வெல்ல வேண்டும் என்றெண்ணாமல், அறத்திற்காகத் தாங்கி நிற்கும் பொறுமையைத் தருமனிடம் காண்கின்றோம். 'இரும்பை இரும்பால் அறுக்க