பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அறத்தின் குரல்


“துரியோதனா! உங்களுக்குள் பகைமை, குரோதம் முதலிய வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சகோதரர்கள். பலர் கூடியிருக்கும் அவையில் உடன் பிறப்பென்ற முறையையும் பொருட்படுத்தாமல் நாகரிக வரம்பையும் மீறி இப்படி இகழ்ந்து பேசுவது நல்லது அல்ல.” அப்போதிருந்த பகைமை வெறியில் வீட்டுமரின் இந்த அறிவுரையை அவன் பொருட்படுத்தவே இல்லை. விதுரனை அழைத்து, ‘'இந்தச் சூதாட்டத்தில் பாண்டவர்கள் நம்மிடம் தோற்ற பொருள்களை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றும் வேலையை நீ செய் அதோடு நாம் வெற்றி பெற்றிருக்கும் இந்த நல்ல நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்படி ஊராருக்கு அறிவிக்கச் செய்” என்றான்.

ஏற்கனவே மனங்கலங்கித் துயரத்தில் ஆழ்ந்திருந்த விதுரன் இந்த வார்த்தைகளைக் கேட்டும் கேட்காதவனைப் போல வீற்றிருந்தான். விதுரனுடைய அமைதியைக் கண்ட துரியோதனன் அவனை இன்னும் பெரிய துன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, “நல்லது! நீ இந்த வேலைகளையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. திரெளபதி இனிமேல் நமக்குச் சொந்தமானவள். அந்தப்புரத்திற்குப் போய் அவளை இங்கே கூட்டிக் கொண்டு வா. வர மறுத்தால் பலவந்தமாகவாவது அழைத்து வர வேண்டும்” என்று புதிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான். விதுரனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தன் அமைதியைத் தானே மீறிக் கொண்டு பேசினான் அவன்.

“நீ எத்தகைய தீய சொற்களை வேண்டுமானாலும் பேசு! நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திரெளபதியை இகழ்ந்து பேசாதே. அந்தப் பேச்சு என் ஆத்திரத்தைக் கிளரச் செய்கிறது. உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். முற்பிறவியில் இராட்சதர்களாக இருந்தவர்கள் இப்போது மனித உருவில் பிறந்திருக்கின்றீர்கள். இப்போது அரக்கத்தனமான செயல்களைச் செய்யத் தொடங்கி