பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
181
 


“ஏன் இன்னும் நின்றுகொண்டே இருக்கிறாய்? புறப்படு தாமதம் கூடாது, என் தமையன் காத்துக் கொண்டிருப்பான்” கூறிக்கொண்டே சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன். திரெளபதி தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டு அவன் பிடியிலிருந்து திமிறினாள். இந்தச் சமயத்தில் கெளரவர்களின் தாயாகிய காந்தாரி அங்கு வந்தாள். துச்சாதனன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஓடிய திரெளபதி காந்தாரியின் அருகே வந்து நின்று கொண்டாள். காந்தாரி தனக்கு அபயமளித்துக் காப்பாற்றுவாள் என்று எண்ணியிருந்தாள் திரௌபதி.

ஆனால் காந்தாரியோ அதற்கு நேர்மாறான எண்ணத்தோடு இருந்தாள். திரெளபதிக்கு அபயமளித்துக் காப்பாற்ற மறுத்ததோடல்லாமல் அவளைத் துச்சாதனனோடு செல்லும்படி வற்புறுத்தினாள் அவள். காந்தாரியின் கொடிய மனோபாவத்தைக் கண்டு திரெளபதி திகைத்தாள், மீண்டும் அவளை இறைஞ்சினாள்.

“உன்னைக் கூப்பிடுகிறவர்கள் உனக்கு விரோதிகள் அல்லவே? உன் மைத்துனன் தானே உரிமையோடு அழைக்கிறான். போனால்தான் என்ன?” என்று கூறினாள் கல்மனம் படைத்த காந்தாரி. தாயும் தன் பக்கம் பரிந்து ஆதரவாகப் பேசுகிறார் என்பதை அறிந்து கொண்டதும் துச்சாதனனுடைய துணிவு இரண்டு மூன்று மடங்கு பெருகி வளர்ந்து விட்டது. அவன் மீண்டும் பாஞ்சாலியைத் தொட்டு இழுத்தான். இம்முறை அவனுடைய முரட்டுக் கரங்கள் அவளது மென்மையான அளகபாரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தன. கூனிக்குறுகி நாணத்தால் ஓடுங்கி நின்ற அவள் கருங்குழல் அவிழ்ந்து மண்ணில் புரண்டு கொண்டிருந்தது. மயிர்கால்கள் இசிவெடுத்து வலிக்கும் படியாக அவளைக் கூந்தல் வழியே பிடித்து இழுத்தான் துச்சாதனன். இவ்வளவையும் பார்த்துக் கொண்டே பேசாமலிருந்தாள் காந்தாரி. ஓர் இளம் பெண் தன்னிடமுள்ள மிகக் குறைந்த வன்மையைக் கொண்டு முரட்டு ஆண்