பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
184
அறத்தின் குரல்
 

வீமன். ஆத்திரத்தால் துடித்த அவன் கைகள் கதாயுதத்தை இறுக்கிப் பிடித்தன. அர்ச்சுனனுடைய கரங்களோ வில்லை எடுக்கத் துறுதுறுத்தன. அப்போதிருந்த கோபவெறியில் அவன் கையில் மட்டும் நாணேற்றிய வில் இருந்திருக்குமானால் கெளரவர்களின் வம்சத்தைப் பூண்டு அற்றுப் போகும்படி துவம்சம் செய்திருப்பான். உணர்ச்சிகளுக்கு விரைவில் ஆட்படாத நகுல சகாதேவர்களும் கூட அளவு கடந்த ஆத்திரமடைந்திருந்தார்கள். வீமனுடைய கதாயுதமும், விசயனுடைய வில்லும், நகுல சகாதேவர்களின் ஆத்திரமும், ஒரே ஒரு பொறுமைசாலியின் கட்டளைக்காகத் தயங்கி நின்றன. யார் அந்த பொறுமைசாலி? தருமன் தான். அவனுடைய சாந்த குணமும் பொறுத்துப் போகின்ற இயல்பும் தான் அப்போது அவர்களுக்குத் தடையாக நின்றன.

“ஆத்திரம் வேண்டாம். பொறுத்திருங்கள். அறம் வீண் போகாது. இந்த மூன்று வாக்கியங்களும் மதிப்பிற்குரிய அவர்கள் தமையன் வாயிலிருந்து வெளிப்பட்டு அவர்களின் சகலவிதமான ஆத்திர உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தியிருந்தன. நெருப்பின் மேல் விழுந்து துடிதுடிக்கும் ஜீவனுள்ள புழுப்போலத் திரெளபதி கதறியழுது கொண்டிருந்தாள். வெந்த புண்ணில் வேல் நுழைவது போல் துச்சாதனன் குறுக்கிட்டுப் பேசினான்.

“இங்கிருப்பவர்கள் எல்லோரும் கொலைகாரர்கள் என்று நினைத்துக் கொண்டாயா நீ? ஏன் இப்படி ஓயாமல் அழுது தொலைக்கிறாய்?. இந்த மாதிரி நீலித்தனங்கள் எல்லாம் பரத்தையர்க்கு உரியவைகள் அல்லவா? நீயும் ஐவருக்கு மனைவிதானே? அதனால் உனக்கும் அந்தப் பரத்தமைக் குணம் உண்டோ என்னவோ?” இது வரை அழுது கொண்டிருந்த திரெளபதி தன் அழுகையை நிறுத்தினாள். அவளுடைய கணவன்மார்களைப் பார்த்தாள். அவர்கள் சொல்லிழந்து செயலிழந்து மூங்கையர்களாய்ச் சிலை போல் வீற்றிருந்தனர். அவள் உள்ளத்தில் தனக்குத்தானாகவே ஒரு