பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

185

துணிவு தோன்றியது. ‘எனக்குத் தேவையானது. நீதி, அதை நானே வாய்திறந்து கேட்கிறேனே?’ என்று தைரியம் அடைந்தாள். அவையிலிருந்த நல்லவர்களை நோக்கித் தன் குறைகளை முறையிடத் தொடங்கினாள்;

“நல்ல உள்ளம் கொண்டவர்களே! சான்றோர்களே! நேர்மை நெறியறிந்த மன்னர்களே ! சூதாட்டத்தில் என் கணவர் என்னைத் தோற்றுவிட்டதாகச் சொல்லி இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். தோற்றிருக்கலாம், ஆனால் தோற்பதற்கும் ஒரு முறை வேண்டாமா? ஒரு நீதி வேண்டாமா? தம்மைத் தோற்குமன் என்னைத் தோற்றி ருந்தால் அது முறையான தோல்விதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தம்மைத் தோற்றப் பின் என்னை அவர் தோற்றிருந்தால் அது முறையான தோல்வியாகுமா? ஒருவர் தம்மையே தோற்றுவிட்ட பிறகு அப்பால் தமது மனைவியை வைத்து ஆடித் தோற்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் கூறுகின்ற இந்த வழக்கு அவையிலுள்ள சான்றோர்களுக்குத் தெளிவாகவே விளங்குமென்று எண்ணுகிறேன். எனக்கு நியாயம் வழங்குமாறு வேண்டுகிறேன்.” திரெளபதியின் உருக்கமான, ஆனால் உறுதி நிறைந்த இந்த வேண்டுகோள் அங்குள்ளோரின் மனங்களை இளகச் செய்தது.

ஆனால் செய்வது என்ன என்பது தான் அவர்களுக்கு விளங்கவில்லை. எழுதிவைத்த சித்திரங்களைப் போல அவையிலிருந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்திருந்த இந்த நிலையில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது! கெளரவ சகோதரர்களுக்குள் இளம் பருவத்தின்னாகிய ஒருவன் அவையில் துணிந்து பேசுவதற்கு எழுந்தான். அவன் பெயர் விகர்ணன். திரெளபதியின் வழக்கிலே நியாயமும் நேர்மையும் இருப்பதை அவன் உணர முடிந்தது. உணர்ந்த உள்ளத்தில் துணிவு பிறந்தது. துணிவோடு பேசத் தொடங்கி விட்டான்;

“அவையிலுள்ள பெரியோர்களே! மன்னர்களே! திரெளபதியின் கேள்விக்கு மறுமொழி கூறாமல்