பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அறத்தின் குரல்

ஊமையர்களைப் போல ஏன் மெளனமாக வீற்றிருக்கின்றீர்கள்? அவளுடைய வாதம் நியாயமானது தானே? எப்போது ஒரு மனிதன் தன்னைத் தானே தோற்று மற்றோர் மனிதனுக்கு அடிமையாகி விட்டானோ அப்போதே அவன் யாவற்றையும் இழந்து விட்டான் என்பது தானே முறை? அதன் பின்பு மனைவியைப் பந்தயமாக வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கின்றது? அப்படியே அவன் ஆடியிருந்தாலும் அந்த ஆட்டம் செல்லுபடியாகுமா? ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? உங்களுக்கு கெல்லாம் இந்த வழக்குத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்திருந்தும் சொல்லுவதற்குப் பயந்து கொண்டு பேசாமல் இருக்கிறீர்களா? உண்மையைக் கூறுவதற்குக் கூட நீங்கள் பயப்பட வேண்டுமா?’ விகர்ணன் இவ்வாறு பேசவும் அவையில் மிக வேகமாக ஒரு கிளர்ச்சி உண்டாகியது. அவனுடைய பேச்சின் கருத்தையும் துணிவையும் அவையிலிருந்தவர்களில் பெரும்பாலோர் வரவேற்றனர். சிலர் அவனைப் போலவே எழுந்து பேசுவதற்கும் துணிந்து விட்டனர்.

நிலைமையை வளரவிட்டு விட்டால் தங்களுடைய சூழ்ச்சியே அழிய நேரிட்டு விடும் என்றஞ்சிய கர்ணன் விகர்ணனைக் கண்டிக்கத் தொடங்கினான். இந்த சிறுவனால்தானே இவ்வளவு கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன என்று ஆத்திரங்கொண்டிருந்தான் அவன்.

“விகர்ணா! அறவிற் சிறந்த பெரியவர்கள் அடங்கிய இந்த அவையில் வயதிலும் அறிவிலும் இளைஞனாசிய உன் போன்றவர்கள் ஆத்திரம் கொண்டு பேசுவது சிறிதும் பொருத்தமாகாது. நியாயத்தைக் கூறுவதற்கு நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது. எங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நீயாகவே எழுந்து வாதாட உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கின்றதா என்ன? தருமன் மனைவியைப் பந்தயமாக வைத்து ஆட உரிமையற்றவன்