பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
187
 

என்றாலும் அவன் தன்னை எங்களுக்குத் தோற்ற போதே தன் மனைவியையும் தோற்றவனாகிறான். ஆகவே அவள் எங்களுக்கு உரியவள் தான். நான் கூறுகிற இந்த உண்மையை அவையோர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.” கர்ணனுடைய வார்த்தைகள் இளைஞனாகிய விகர்ணனை அடக்கி உட்கார்த்தி விட்டன.

சமயமறிந்து கர்ணன் விகர்ணனை அடக்கியது துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாக மற்றொரு தீய செயலுக்கு உறுதி கொண்டது அவன் மனம். அவன் துச்சாதனனை அருகில் அழைத்துக் கட்டளையிட்டான்.

“தம்பீ! உனக்கொரு உற்சாகம் நிறைந்த வேலை தருகிறேன், செய்வாயா?”

“செய்கிறேன் அண்ணா !”

“கேள்! இந்த அவையிலுள்ள யாவரும் காணும் படியாகப் பாண்டவர்களையும் அவர்களுடைய மனைவியான இந்தத் திரெளபதியையும் அவமானப்படுத்த வேண்டும் அல்லவா?”

“கட்டாயம் அப்படியே செய்ய வேண்டும் அண்ணா !”

“அப்படியானால் அவர்கள் ஆறு பேர்களுடைய ஆடைகளையும் களைந்து விடு தம்பீ!” துரியோதனன் உற்சாகத்தோடு பாண்டவர்களை நோக்கிச் சொன்னான். தன்மானம் மிக்க பாண்டவர்களை அந்த அயோக்கியனின் கரங்கள் தீண்டி ஆடைகளைப் பறிப்பதை விரும்பவில்லை, மேலாடைகளையும் பிற ஆபரணங்களையும் ஐந்து பேரும் தாமாகவே கழற்றி அவன் முன் வீசி எறிந்து விட்டார்கள். சின்னஞ்சிறிய அரை ஆடைகளுடனே காணக் கவர்ச்சியில்லாத தோற்றத்தோடு பாண்டவர் நின்ற நிலையைக் காணச் சகிக்காமல் அவையோர் தலைகுனிந்தனர்.