பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17

வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற அரசியற் கருத்துள்ள பழமொழிகளை அறியாதவன் அல்லன் தருமன். ‘வில்லும், வாளும் ஏந்திப் போர் செய்யும் திறனும், அரசியலை எப்படி நடத்தவேண்டும் என்ற சூழ்ச்சியைக் கற்பிக்கும் அரசியல் நூல்களும், தனக்குத் தெரியாதவை என்ற பலவீனம் தருமனிடம் இல்லை. ‘வாழ்க்கையில் ஒருமையான சட்டம் அறம். அதை மீறியோ, விலகியோ, வாழ்வது பிழை’ என்ற உயரிய நோக்கு அவனுக்கு இருந்தது. அந்த நோக்கு ஒன்றினால்தான், ‘மற்றைய வழிகள் அவனுக்குப் புலப்படவில்லையோ?’ - என்று நாம் ஐயுறுகின்ற அளவிற்கு அறம் பழுத்த வாழ்வாக விளங்கிற்று அவனுடைய வாழ்வு. இதயம் பண்பாட்டுக் கனிந்த நிலை அடைந்திருந்தால் ஒழிய இப்படிப்பட்ட வாழ்வு சாத்தியமில்லை. கைகுவித்து வணங்க வேண்டிய கடவுள் வாழ்க்கை அல்லவா இது? பீமனை நோக்கினால் ‘வாழ்ந்தால் ஆண்மைக்காக வாழவேண்டும்’ என்ற நோக்கு அவனுக்கு அமைந்திருந்ததை உணர்கிறோம். தருமன் அறத்தின் பெயரால் பொறுமை கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் வீமன் ஆண்மையின் பெயரால் குமுறுவதைக் கண்டு இருவருக்குமுள்ள பண்பு வேறுபாடு புலனாகிறதைத் தெளியலாம். ஆண்மை ஒன்றே கொழித்து வளர்வதற்கு ஏற்றபடி வீமனுக்கு உடலும் உள்ளமும் மென்மை விரவாத தனி வலிமையினால் ஆகியிருந்தன. இந்த ஆண்மையும் தீமை கலந்த ஆண்மை அன்று, தீமையைக் கண்டு பொறுக்க முடியாமல் குமுறுகின்ற நேரிய ஆண்மையே. தருமனுக்கு இருந்த 'பொறுமையுள்ளம்’ வீமனுக்கு இல்லை. வீமனுக்கு இருந்த ‘தீமை கண்டு சீறும் ஆண்மை நெஞ்சம்’ தருமனுக்கு இல்லை.– இதுதான் இவர்களிருவருக்கும் இடையேயுள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு இல்லை என்றால் காவியத்தில் சுவையும் விறுவிறுப்பும் எப்படி இருக்க முடியும்? அருச்சுனனுடைய வாழ்வோ, காதல், வீரம் உணர்ச்சி ஆகிய மூன்று வேறு பண்பு நிலைகளிலும் மாறி மாறித் திகழ்கிறது. மென்மையும்அ. கு. – 2