பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
அறத்தின் குரல்
 


கொடிய உள்ளமும் வலிய எண்ணமும் தவிர ஈரமும் கருணையும் இன்னவென்றறியாத துச்சாதனன், திரெளபதி யை மானபங்கம் செய்வதற்காக அவளை அணுகினான். அங்கே கூடியிருந்த ஆண்மையாளர்கள் அத்தனை பேருக்கும் மனத்தைக் கொதிக்க வைக்கும் காரியத்தைச் செய்ய இருந்தான் அவன். ஆனால் கொதிக்க வேண்டிய மனங்கள் எல்லாம் உணர்வொழிந்து கிடந்தன. எல்லா ஆண்மக்களும், பாண்டவர்களுட்படக் கல்லாலடித்த சிலைகளாக இருந்து விட்டனர்.

திரெளபதியின் விழி மலர்களிரண்டும் ஆறாகக் கண்ணீர் சொரிந்தன. அவிழ்ந்து பிரிந்து கிடந்த கூந்தல் முதுகை மறைத்தது. ஒரு கையினால் தன் அரையாடையை இறுகப் பற்றிக் கொண்டாள். மற்றோர் கை மார்புத் துகிலைக் காத்துக் கொண்டிருந்தது. உடல் சோர்ந்து துவண்டது. பயம் சோர்வை உண்டாக்கியது. இந்த அநியாயம் நடப்பதற்குள் மண் பிளந்து என்னை விழுங்கி விடக் கூடாதா? என்றெண்ணித் துன்பம் துடைக்கும் இன்பப் பொருளாகிய கண்ணபிரானிடம் தன் மனத்தைச் செலுத்தினாள். மனம், ‘கண்ணா! உன் அடைக்கலம். நீ காப்பாற்றினால் மானம் பிழைக்கும், கைவிட்டால் மானம் அழிந்து விடும். கருணை வள்ளலை காப்பாற்று’ என்ற தியானத்திலேயே மூழ்கியிருந்தது. வாயோ அவன் திருநாமமாகிய ‘கோவிந்தா!’ ‘கோவிந்தா!’ என்பதையன்றி வேறொன்றும் கூறியறியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்ற அகங்காரம் அவளை விட்டு அகன்றது. ‘உடல், பொருள், ஆவி மூன்றும் இறைவனுக்குச் சொந்தம். அவன் விரும்பினால் காக்கட்டும், விரும்பாவிட்டால் விரும்பியபடியே செய்யட்டும்’ என்று தன்னைக் கண்ணபிரானிடம் ஒப்படைத்தாள்.

இறைவனை நோக்கிச் செய்த இந்த ஆத்ம சமர்ப்பணம் வரப்பிரசாத சக்தி வாய்ந்ததாக இருந்தது. திரெளபதியின் மானத்தை அன்று காப்பாற்றிக் கொடுத்தது இந்த ஆத்ம சமர்ப்பணம் ஒன்றுதான். துச்சாதனனுடைய முரட்டுக்