பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

189

கரங்கள் அவளுடைய ஆடையின் தலைப்பைப் பற்றிப் பரபரவென்று இழுத்தன. ஆடை சுற்றுச் சுற்றாகப் பெயர்ந்து விழுந்தது, துச்சாதனன் பேய்ச் சிரிப்புச் சிரித்தான். மேலும் மேலும் தலைப்பைப் பற்றி இழுத்துக் கொண்டேயிருந்தான். அவையில் குனிந்த தலைகளுடன் வீற்றிருந்த பெருமக்கள் இரக்கம் நிறைந்த சிறு சிறு குரல்களை எழுப்பினர். திரௌபதியின் மானம் இன்னும் ஓரிரு கணங்களில் பாழ் போய் விடப் போகிறதே என்று பதறினர்.

ஆனால் என்ன விந்தை? என்ன பேராச்சரியம்? களிப்போடு பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் கண்களில் பயச்சாயை படிந்தது. துச்சாதனன் கைகள் சோர்கின்றன. திரெளபதியின் மெய்யில் ஆடை பெருகி வளர்ந்து கொண்டே போகிறது. வேதங்களாலும் காணமுடியாத பரம் பொருளின் சொரூபத்தைப் போலத் திரௌபதியின் துகில் மறைத்த சரீரம் காணாப் பொருளாய் நின்றது. துச்சாதனனைச் சுற்றிலும் துகில்கள் மலை மலையாகக் குவிந்துவிட்டன. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உரிய உரியத் துகில்கள் வளர்ந்து கொண்டிருந்தன. துச்சாதனன் மலைத்தான். அவன் உள்ளத்தில் பீதியும் திகைப்பும் தோன்றின. கைகளும் உடலும் களைத்து ஓய்ந்து ஒடுங்கிவிட்டன. ஆற்றாமை உடலைத் தள்ளாடச் செய்தது. அவை எங்கும் குவிந்து கிடந்த சேலைக் குவியல்களைச் சேவகர்கள் அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தனர். தள்ளாடியவாறே அந்தச் சேலைக் குவியலின் மீது பொத்தென்று விழுந்தான் துச்சாதனன். கூப்பிய கரங்களுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி. பக்தி பரவசத்தினால் மனம் பூரிக்க முகமலர்ச்சியோடு நின்று கொண்டிருந்த அவள், தோன்றாத் துணையாயிருந்து தன்னைக் காத்த பரம் பொருளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

வீட்டுமர், துரோணர் முதலிய முதுமக்கள் “ஆகா இந்தப் பெண்ணினுடைய கற்பை இறைவனே துணையாகிக்