பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
192
அறத்தின் குரல்
 

குருதியைப் பூசினாலொழிய என் சினம் தீராது. இன்று விரிக்கப்பட்ட என்னுடைய இக் கூந்தல் இந்தச் சபதம் நிறைவேறினாலன்றி முடிக்கப்படாது. இது உறுதி. சத்தியம். என்னுடைய இந்தப் பயங்கரமான சபதம் நிறைவேறும்போது இந்த அரசனும் இவனுடைய குலமும் வேரற்று வீழ்ந்து போய்விடப் போகிறார்கள் பாருங்கள்.

துச்சாதனன் அவளை அணுகுவதற்கு அஞ்சி நடுநடுங்கி நின்று விட்டான். துணிவும் முரட்டுத்தனமும் திரெளபதியின் பேச்சால் அவனை விட்டு நழுவிப் போயிருந்தன. ஏற்கனவே ஆத்திரமும் கொதிப்பும் கொண்டிருந்த வீமன் தானும் எழுந்து நின்று ஒரு சபதம் செய்தான்.

“ஒழுக்கம் மிகுந்தவர்களும் பெரியோர்களும் நிறைந்துள்ள இந்தப் பேரவையில் என் மனைவியை இழிவு செய்தவர்களைப் போர்களத்தில் கொன்று பழி தீர்த்துக் கொள்ளாது விடமாட்டேன். இந்தத் துரியோதனனும் துச்சாதனனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் என் கையாலேயே சாகப் போகிறார்கள். திரெளபதியை மானபங்கப் படுத்த முயன்ற துச்சாதனின் இரத்தத்தைக் குடித்தாலொழிய என் ஆத்திரத்தின் தாகம் தீராது போல் இருக்கிறது. அது வரை தண்ணீரைக் கூட நான் என் கைகளால் குடிக்கப் போவதில்லை. அவசியமானால் என் கதாயுதத்தை நீரில் தோய்த்து அதிலிருந்து வடிகின்ற நீரையே பருகுவேன். இது என் சபதம்” வீமனுக்குப் பின் அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்துத் தங்கள் சபதத்தைக் கூறினர். தான் கர்ணனை கொன்று முடிக்கப் போவதாக அர்ச்சுனன் ஆவேசத்தோடு கூறினான். சகாதேவன் சகுனியையும், நகுலன் சகுனியின் மகனையும் கொல்லப் போவதாகக் கூறினார்கள், சகோதரர்களின் ஏகோபித்த சபதங்கள் கௌரவர்களை உள்ளூரத் திகில் கொள்ளச் செய்தன.

“நன்றாக வேண்டும் இந்தக் கெளரவர்களுக்கு! இவர்கள் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் செய்த தீமைகளை