பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

193

எண்ண முடியுமா? பாண்டவர்கள் தாங்கள் கூறிய சபதத்தின் படியே இவர்களை அழித்துவிடப் போவது என்னவோ உறுதிதான்” என்று அவையிலிருந்த அரசர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கற்பு நெறி தவறாத பெண் ஒருத்தியின் கண்கள் தீயவர்களின் கொடுமையால் கண்ணீரைச் சிந்துமாயின் அது இந்த உலகத்துக்குப் பெரிய அபசகுணம். வானத்தில் மேகங்கள் கூடாமலே இடி இடித்துவிடலாம். சூரியனின் வடிவத்தைச் சுற்றிக் கோட்டை கட்டினாற்போல் வளையம் தோன்றலாம். பகல் நேரத்தில் தோன்றக்கூடாத நட்சத்திரங்கள் தோன்றிவிடலாம். அவை மண்ணில் உதிர்கின்ற தீமையும் நிகழலாம். ஆனால் இவைகளை எல்லாம் விடப் பெரிய தீநிமித்தம் கற்புடைய பெண் கதறிக் கண்ணீர் சிந்துவதேயாம். திரெளபதியின் கண்ணீரும் உலகத்துக்கு அப்படி ஒரு பெரிய தீமையாக நேர்ந்திருந்தது. அவையிற் கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் இப்படி ஒரு பீதி பரவிப் போயிருந்தது. ‘என்னென்ன தீமைகளுக்கு இது எதுவாகுமோ? ஊருக்குத் துன்பம் வருமோ?’ என்று பலருக்கும் பலவிதமாக அச்சம் ஏற்பட்டது.

அதுவரை எல்லாத் தீமைகளையும் தடுக்காமல் வாளா வீற்றிருந்த திருதராட்டிரன் கூட அப்போது தான் கொஞ்சம் திகிலடைந்தான். அவன் நெஞ்சம் துணுக்குற்றது. தன் குலம் குடி எல்லாம் விரைவாக அழிந்து போவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை தோன்றி அவனை வதைத்தது. குருடனாகிய அவன் தன் அரியணையிலிருந்து இறங்கித் தட்டுத் தடுமாறித் திரெளபதி நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.

“அம்மா! நீ பெண் தெய்வம். தர்ம பத்தினி. உன் சக்தி பெரிது. அதை அறிந்து கொள்ளத் தெரியாமல் மூடர்களாகிய என் பிள்ளைகள் ஏதேதோ தீங்குகளை உனக்குச் செய்துவிட்டார்கள். எனக்காக அவற்றைப் பொறுத்துக் கொள். என் குலம் அழிவதும் தழைப்பதும் உன் கையில் இருக்கிறது அம்மா! பேதைகளாகிய என் புதல்வர்களின்

அ.கு. -13