பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அறத்தின் குரல்

வன்மையும் சம அளவில் விரவி இணைந்த வாழ்வு அது. தருமனுக்கு அடுத்த நிலையில் உள்ளப் பண்பாட்டினால் எய்தும் பெருமை அருச்சுனனுக்கே கிட்டுகிறது. வீமனைப் போலத் தீமையைக் கண்டு குமுறிக் கொதிக்கும் உணர்ச்சி மயமான உள்ளம் அருச்சுனனுக்கு இல்லை என்றாலும் தீமை கண்டபோது, அதை அழிக்க வேண்டும் என்ற இயற்கையான உணர்வும், வில்லைத் தேடி விரையும் கரங்களும் இருந்தன. இதேபோல அழகையும் மென்மையையும் நுகரவேண்டும் என்ற கலையுணர்வும் அவனுக்கு இருந்தது. அவற்றைக் காதலித்து நுகரவேண்டும் என்ற மன ஆர்வமும் அவனுடைய உள்ளத்திற்கு இருந்தது. வில்லைப் பிடித்த கைகளுக்கு மலர் மாலைகளை ஏந்தவும் தெரிந்திருந்தது. சுருங்கக் கூறினால் வீரத்துடனே அழகு உணர்ச்சியும் அருச்சுனனிடம் நிறைந்திருந்தது. இது தருமனுக்கும் வீமனுக்கும் இடைப்பட்ட ஒருவகைக் குணச்சித்திரமாக அமைந்து சிறப்பை அளிக்கின்றது. நகுல், சகாதேவர்களுடைய குணங்கள் தெளிவாக விளங்கும்படியான முறையில் பாரதக் கதையைப் பற்றி நிகழும் எந்த ஒரு காவியமும் அவர்களுடைய குணங்களைச் சிறப்பாக வரையறுத்துக் கூறக் காணோம். பாரதக் கதையில் மிகச் சாதாரணமான துணைப் பாத்திரங்களைப் போலவே இவர்கள் எப்போதாவது வந்து போகின்றனர். இவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளோ மிகச்சில இடங்களிலேயே குறுகிய முறையில் கூறப்பட்டுள்ளன. ஆகையால் நகுல சகாதேவர்களின் குணங்களை மிக உன்னதமாகவோ, இழிவாகவோ, எந்த வகையிலும் தெளிவு செய்து ஒப்பிடுவதற்குரிய வாய்ப்பு நமக்கு இல்லை. பாண்டவ சகோதரர்களில் அவர்களும் இக்காவியமாகிய பெருவாழ்வில் இடையிடையே வந்து போகும் இருவர் என்ற முறையிலும் அவர்களைப் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம், அதுவே இப்பொழுதுக்கு இங்கே பொருத்தமாக ஏற்பது. இதுவரை பகைப் புலனுக்கு நேர் எதிரிடையாகவும் காவியக் கருத்துக்கு உடன்பாடாகவும் நின்ற பாத்திரங்கள் ஐந்தைக்