பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202
அறத்தின் குரல்
 

நிகழ்ந்து முடிந்ததும் உங்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பெரிய போர் நேரிடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் சொந்த ஆற்றல் ஒன்று மட்டும் போதாது. இறைவன் அருள் துணை வலிமையும் வேண்டும். அந்த அருள் துணையை அடையும் முயற்சியில் இப்போது முதலில் அர்ச்சுனனை ஈடுபடுத்தலாம் என்று கருதியே நான் வந்தேன். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் என்ற வன்மை வாய்ந்த அஸ்திரம் ஒன்றுள்ளது. அதை அடைவதற்காக அர்ச்சுனன் அந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்ய வேண்டும். இப்போதே இந்த விநாடியிலிருந்து என் சொற்களை மதித்துத் தனிமையிற் சென்று இந்தத் தவ முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.” வியாசர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் அவரையும் தமையனையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காகச் சென்றான்.

“தர்மம் தோற்காது; சத்தியம் என்றும் அழியாது என்பதை அறிந்து கொண்டவன் நீ தருமா! வஞ்சங்களுக்கும் பகைவர் தீமைகளுக்கும் மனம் தளராமல் இந்த வனவாச காலத்தைக் கழித்து விட்டால் வெற்றி உன் பக்கமே காத்திருக்கிறது” என்று மேலும் கூறிவிட்டு வியாச முனிவரும் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்றார். எத்தனை யெத்தனை துயரங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி கொள்ள வேண்டும் என்ற துணிவு வியாசரின் அறிவுரையால் அவர்கள் உள்ளத்தே விளைந்து முற்றத் தொடங்கியிருந்தது.

2. விசயன் தவநிலை

வியாசரிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவபெருமானை நோக்கித் தவமியற்றச் சென்ற அர்ச்சுனன் வடதிசையில் பல நாள் இடைவிடாது பிரயாணம் செய்து இமயமலையை அடைந்தான்.