பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
206
அறத்தின் குரல்
 

உறுதியாக வெற்றியடைந்தே தீரும். சிவபெருமானை நீ காண்பாய். உனக்குரிய வரத்தையும் நீ பெறுவாய்” என்று கூறி வாழ்த்தி விட்டுச் சென்றான் இந்திரன் அர்ச்சுனன் பழையபடி உறுதியுடனும் ஊக்கத்துடனும் தனது தவத்தை ஆரம்பித்தான்.

3. சிவதரிசனம்

கைலாச சிகரத்தின் உச்சியிலிருந்து மவர்களைக் கொய்யவும் நீராடுவதற்காகவும் மலைச் சாரலுக்கு வந்து செல்லும் உமாதேவியின் தோழிப் பெண்கள் ஒருநாள் அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விட்டனர். அவர்கள் மூலமாகச் செய்தி உமாதேவிக்கு எட்டியது. உமாதேவி சிவபெருமானோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருக்கும் செய்தியை அவருக்குக் கூறினாள். மகேஸ்வரனாகிய சிவபெருமான் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவருடைய முகமண்டலத்தில் புதியதோர் விகசிப்புத் தோன்றியது. அவருடைய முகமலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புகின்ற பாவனையில் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் உமாதேவி.

“தேவி! அர்ச்சுனன் இங்கு வந்து பல நாட்களாகத் தவம் செய்து கொண்டிருப்பதை நான் முன்பே அறிவேன். துரியோதனாதியர்கள் கொடுமை செய்து பாண்டவர்களை யாவும் இழந்து காட்டிற்கு வரும்படி செய்து விட்டார்கள். வனவாசம் முடிந்ததும் துரியோதனாதியர்களோடு போர் செய்வதற்காக பாசுபதாஸ்திரம் பெற விரும்பியே அர்ச்சுனன் என்னை நோக்கித் தவம் செய்கிறான். அவனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்."