பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அறத்தின் குரல்

முகாசுரன் அர்ச்சுனன் மேலே தாவிப் பாய்ந்து அவனைக் கொல்ல முயன்று கொண்டிருந்தான். தியானத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சுனன் விழித்துக் கொண்டு பன்றி மேல் அம்பு எய்தான். அவன் எய்த அம்பு பன்றியைத் துளைப்பதற்கு முன்பே வேடனாக வந்திருந்த சிவபெருமானின் அம்பு பன்றியைத் துளைத்து விட்டது. இரண்டாவதாக அர்ச்சுனனின் அம்பும் துளைத்தது. இரண்டு அம்புகளுமாகச் சேர்ந்து பன்றியை இறக்கச் செய்து விட்டதென்னவோ உண்மை.

ஆனால் சிவனுடைய ஏவலின்படி சோதனைக்காக அர்ச்சுனனைச் சிவ கணங்கள் வம்புக்கு இழுத்தன. “எங்கள் தலைவன் அம்பு எய்தபின் செத்த பன்றியின் மேல் புதிதாக அம்பு தொடுப்பது போல நீயும் அம்பு தொடுக்கலாமா? அப்படிச் செய்வது சுத்த வீரனுக்கு அழகல்லவே?”

“தவறு நீங்கள் உங்கள் தலைவன் பன்றியை எய்ததாகக் கூறுவது பொய். உங்கள் தலைவன் எய்யத் தொடங்கு முன்பே என் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டு விட்டது.” அர்ச்சுனன் விடவில்லை! பன்றி தன் அம்பினாலேயே இறந்ததென்றும் தானே முதலில் எய்ததாகவும் சாதித்தான்!

சிவபெருமானும் சிவகணங்களும் அதை வலிந்து மறுத்தனர். இறுதியில் வேடனாக வந்திருந்த சிவபெருமானுக்குக் கோபம் வந்து விட்டது. “உண்மையில் நீ ஒரு தபஸ்விதானா? விருப்பு வெறுப்பற்றுத் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் உனக்கு ஒரு பன்றியின் உயிரைக் கொல்லும் ஆசை ஏற்படலாமா? நீ தவம் செய்வது போல் நடிக்கிறாய். உண்மையில் நீ ஒரு அயோக்கியன். நீ இங்கே பொறுமையோடு தவம் செய்வது போல் நடிப்பது யாரைக் கெடுப்பதற்கோ? உன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லவில்லை என்றால் நீ என்னிடமிருந்து உயிரோடு தப்ப முடியாது!”

“வீண் கோபம் கொண்டு துள்ளாதே வேடனே! நான் யார் என்பதைச் சொன்னால் நீ இங்கே நிற்பதற்கே பயந்து என்னை வணங்கி விட்டு ஓடிப் போவாய். ஜாக்கிரதை!"