பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

அறத்தின் குரல்

சிறந்த தேரையும், தேரோட்டும் தொழிலில் வல்லவனாகிய ‘மாதலி’ என்னும் பாகனையும் அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தான். அர்ச்சுனன் பெற்றுக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். வானுலகம் முழுவதுமே அவனை வாழ்த்தி வழியனுப்பியது.

மாதலி தேரைச் செலுத்தினான். தேரில் அர்ச்சுனன் போர்க்கோலம் பூண்டு நின்றிருந்தான். தேர் சென்று கொண்டிருக்கும்போதே பாகனை நோக்கித் தோயமாபுரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விசாரித்தான். கீழ்க் கடலின் இடையே அந்த அரக்கர்களின் தலைநகரம் அமைந்திருப்பதாகவும் அங்கே போக வேண்டும் என்றும் அவன் கூறினான். மாதலியின் ஏற்பாட்டால் அர்ச்சுனனுக்கும் அவனுக்கும் தோயமாபுரத்திற்குத் தேர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுவதற்காகச் சித்திரசேனன் என்பவனும் உடன் வந்தான். வானுலக வீதிகளைக் கடந்து அர்ச்சுனனுடைய தேர் சென்ற போது மேல் மாடங்களில் நின்று கண்ட தேவருலகப் பெண்கள் அவனை இகழ்ச்சி தோன்ற நோக்கி நகைத்தனர். அவன் நிவாதகவர்களை அழிக்க முடியாது என்று எண்ணியே தேவமாதர்கள் அவ்வாறு செய்தனர். அர்ச்சுனனோ தேரில் சென்று கொண்டே அந்தப் பெண்களின் அறியாமையை எண்ணித் தனக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் அர்ச்சுனனுடைய பேராண்மையையும் வீரத்தையும் உணர்ந்தவர்களோ ‘இவனுடைய ஆற்றல் தேவர்களுடைய ஆற்றலைவிடப் பெரியது! நிச்சயமாக இவன் நிவாதகவர்களை வென்று வாகை சூடி வருவான்’ என்று பேசிக் கொண்டார்கள்.

இவ்வாறு அர்ச்சுனனைப் பற்றி அறிந்தோர் புகழ்ந்தும், அறியாதோர் இகழ்ந்தும், பேசிக் கொண்டிருந்த வானுலக எல்லையைக் கடந்து தேர் தோய்மாபுரத்து வழியில் தனியே செல்லலாயிற்று. “மாதலி! அந்த அசுரர்களைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறு. கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன். உன்