பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறத்தின் குரல்

சூழ்நிலையும் துரியோதனனைத் தீயவைகளைக் கூசாமற் செய்பவனாக ஆக்கியிருந்தன எனலாம். கர்ணன், அவனைப் பொறுத்தமட்டில் தனி நிலையில் சிறந்த வீரனாகத் தோன்றினாலும் பொறாமை, ஆத்திரம், அளவிறந்த மானம் என்னும் இம்மறைக் குணங்களால் கெளரவர்களைப் போலவே தானும் ஒரு தீயவனாகவே தோற்றம் பெற நேரிடுகின்றது. கொடையும், குன்றா வீரமும் ஆகிய இருபெரும் பண்புகளைப் பெற்றிருந்தும் அவன் எந்த ஒரு நல்ல பண்பையும் பெற முடியாத கெளரவர்களில் தானும் ஒருவனாக விளங்க வேண்டியதாகின்றது. சகுனியோ கல்மனமும் தீமைப் பண்புகளுமே முற்றிய கொடியவனாகச் சித்திரிக்கப்படுகின்றான். துச்சாதனன் முதலிய மற்றையோரையும் இந்த வகையிலேயே சேர்க்க நேரிடுகின்றது.

திருதராட்டிரன் குண அமைப்பு அநுபவமும் முதுமையும் பொருந்திய ஓர் அரசனுக்கு ஏற்ற இயல்பான முறையில் பெரும்பகுதி நன்மைக் கூறுபாடும் சிறு பகுதி தீமைக் கூறுபாடும் உடையதாக வரையறுக்கபட்டிருக்கிறது. விதுரன், வீட்டுமன், துரோணன் முதலிய சான்றோர்கள் சான்றாண்மைக்குரிய குணக்குன்றுகளாகவும் கடமை வீரர்களாகவும் இக்காவியத்தில் ஒளியுற்று இலங்குகின்றனர். இனி பாண்டவர், கெளரவர், இருசாரார்க்கும் ஆதி காரணமாய் நின்று பாரதக் கதையை நிகழ்த்திச் செல்லும் கண்ணனும் இக்காவியத்தில் ஒரு பாத்திரமே. இறைமையின் பேராற்றல்கள் யாவும் நிறைந்த இறையம்சத்திற்குரிய தலை பெரும் பாத்திரமாக வருகின்றான் கண்ணன். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே தூதுவனாகச் செல்லும் நிலையிலும் போர்களத்திலும் தயக்கமுற்ற அருச்சுனனைத் தேற்றிப் 'போர் செய்யலாம்’ என்று அறிவுரை கூறும் நிலையிலும் கண்ணனின் இறைமைக் குணங்கள் நுணுக்கமான முறையில் விளங்குகின்றன. பரம்பொருளின் சாயையான மனிதனாக உலாவினாலுமே காண்போர்க்கு அங்கங்கே எண்ணத்தால் வியப்பும்