பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
218
அறத்தின் குரல்
 

உடைமைகளையும் பறித்துக் கொண்ட துரியோதனாதியர்களை எதிர்க்கத் தெரியாத அந்த அப்பாவி அர்ச்சுனன் எங்களை எதிர்த்தா போருக்கு வந்திருக்கிறான்? வெட்கக் கேடுதான்” என்று அவமதித்துப் பேசினார்கள் நிவாத கவசர்கள்.

மூன்று கோடி அசுரர்களுக்கும் சினம் மூண்டது. மனம் கொதித்துப் படைகளோடு அர்ச்சுனனை எதிர்க்கப் புறப்பட்டனர். கடல் ஒன்று அலைமோதிக் கொந்தளித்துத் திரண்டு வருவதைப் போல் அசுரர் கூட்டம் ஊர் எல்லையில் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைத் தனித் தேரை நோக்கிப் பாய்ந்தது. அம்புகள் எட்டுத் திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. அவனும் தன் கைவில்லை வளைத்து அம்புகளைப் பாய்ச்சினான். “அசுரர்களே! நான் இங்கு வில்லோடு வந்திருப்பதைக் கொண்டே உங்களுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இது வரையிலும் உங்களை எதிர்த்து வந்து உங்களோடு போர் புரிந்து தோற்றுப் போனவர்களைப் போல் என்னையும் எண்ணிவிடாதீர்கள். நான் உங்களை அழித்தொழிப்பதற்கென்றே வந்திருக்கிறேன்.” இவ்வாறு கூறிக்கொண்டே எதிரே கடல் போலச் சூழ்ந்து நிற்கும் அசுரர்களின் மேல் அம்பு மாரி பொழிந்தான் அர்ச்சுனன்.

“உங்கள் மனைவி திரெளபதியை அவமானம் செய்தும், சூதாடி நாட்டை அபகரித்துக் கொண்டு உங்களுக்குத் துன்பமிழைத்த கெளரவர்களை அழிக்கத் தெரியாத நீ எங்களிடமா வீறு பேசுகிறாய்? அழியப் போவது நீதான்! நாங்களில்லை” -என்று கூறிக் கொண்டே நிவாதகவசர்கள் அவனை நெருங்கினர்.

அவர்களுடைய தாக்குதலுக்குத் தான் ஆளாகாமல் சமாளித்துக் கொண்டு தன் அம்புகளால் அவர்களை அழித்துக் கொண்டிருந்தான் விசயன். நிவாதகவசர்கள்