பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

அறத்தின் குரல்


“அப்பா! இது தேவர்கோன் தன் முடியிலே அணியத்தகுதி வாய்ந்த பொற்றாமரைப்பூ. நிதியின் கிழவனாகிய குபேரனுடைய அளகாபுரியிலன்றி இம்மலர்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. சாதாரண மனிதர்கள் முயன்று இம் மலரைக் கொண்டுவருவது இயலாது. ஒருக்கால் உன் போன்ற வீரனுக்கு எளிமையாக முடிந்தாலும் முடியலாம். முயன்று பார்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கூறினார். வீமன் துணிவோடு புறப்பட்டுவிட்டான். ஆயுதபாணியாகப் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறவனைப் போல அவன் சென்றான். திரெளபதிக்கு விரைவில் அந்த மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவளை மகிழச் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு அவசரமாகப் புறப்பட்ட அவன் போகும் போது தருமனிடம் கூறி விடை பெற மறந்துவிட்டான்.

செல்லும் வழியில் கதலி வனம் என்ற ஓர் பெரிய வாழைக்காடு குறுக்கிட்டது. அந்த வனத்தின் ஒரு கோடியில் இராமபக்தனாகிய அனுமன் புலன்களை அடக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தவம் செய்து கொண்டிருந்தான். வீமனுக்கு இது தெரியாது. அந்த வனத்தின் வழியே போகும்போது சில அரக்கர்கள் வழி நடுவே அவனை எதிர்த்துப் போருக்கு வந்தனர். வீமன் சிறிதும் தயங்காமல் அவர்களோடு போர் செய்தான். சில நாழிகைப் போரிலேயே அந்த அரக்கர்கள் அழிவடைந்து தோற்றுப் போய்விட்டனர். அவர்களை வென்று தொலைத்த பெருமிதத்தால் மகிழ்ச்சியோடு வீமன் தன்னிடமிருந்த சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்தான். அவன் செய்த சங்கநாதத்தின் ஒலியால் அங்கே தவம் செய்து கொண்டிருந்த அனுமனின் தவம் கலைந்து விட்டது. தவம் கலைந்து சிறிது சினம் கொண்ட அனுமன் ஆத்திரத்தோடு எழுந்து வீமனுக்கு முன் வந்தான்.

வந்தவன் ‘வீமன் அஞ்சி நடுநடுங்க வேண்டும்’ -என்ற எண்ணம் கொண்டு தன்னுடைய விசுவரூபத் தோற்றத்தைக் காண்பித்தான். வானத்துக்கும் பூமிக்குமாக நிமிர்ந்து